Published : 22 Jan 2022 06:51 PM
Last Updated : 22 Jan 2022 06:51 PM
ஒமைக்ரான் பரவல் தீவிரத்தின் காரணமாக கரோனா அச்சம் அதிகரித்து வரும் வேளையில், கர்ப்பிணிகள், புதிதாக பிரசவித்த தாய்மார்கள், இளம் பெற்றோருக்கு தங்கள் பச்சிளம் குழந்தையை எந்தவிதமான தொற்றும் ஏற்படாதவண்ணம் எப்படி பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளப்போகிறோம் என்பதும் கவலையாகவே இருக்கிறது. இந்த கரோனா காலத்தில் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பேணுவது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.எஸ்.பெருமாள் பிள்ளை அளித்த சிறப்புப் பேட்டி இது...
பிறந்த குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுமா? தவிர்ப்பது எப்படி?
"கைக்குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது ரொம்ப குறைவுதான். அதேநேரத்தில் அவர்களுக்கு கரோனா வருவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று, தாயிடம் இருந்து வந்திருக்க வேண்டும். இல்லை, அந்தக் குழந்தையை யார் பராமரிக்கிறார்களோ அவர்களிடம் இருந்து வந்திருக்க வேண்டும். புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகளை கவனிக்கும் செவிலியர்களிடம் சொல்லிவருவது என்னெவென்றால், யார் குழந்தைகளைப் பராமரித்தாலும் அவர்கள் எப்போதும் கைகளைச் சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும். கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."
கைக்குழந்தைகளிடம் கரோனா அறிகுறிகளை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
"பெரியவர்களோடு குழந்தைகளை ஒப்பிடும்போது, அவர்களுக்கு கரோனா பாதிப்பு மிகவும் குறைவுதான். அப்படியே வந்தாலும் மைல்ட்டாகத்தான் வரும். பயமுறுத்தும் அளவில் இருக்காது. அரிதாக குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சரியாகிவிடுவர். பாதித்த குழந்தைகள் சரியான பின்தான் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒரு சில வாரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் போல தோன்றினாலும் எம்ஐஎஸ்-சி (MIS-C)னு சொல்லப்படுகிற மல்டி சிஸ்டம் இன்பிளெமெட்ரி சின்ட்ரோம் இன் சில்ட்ரன் (Multi-System Inflammatory Syndrome in Children) அறிகுறிகளால் பாதிக்கப்படக் கூடும். இந்த எம்ஐஎஸ்-சியைத் தடுக்க குழந்தை மருத்துவ நிபுணர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் மிகவும் சோர்வாக இருப்பார்கள். உதடுகள் வெடிப்புகளுடன் காணப்படும். கண்கள் சிவந்து இருக்கும். மூச்சு வாங்குவார்கள். மயக்கம் இருக்கும். வயிற்று வலியும் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும். உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் (100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கு மேற்பட்டது) 24 மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீடித்தால், உடனடியாக குழந்தை மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கவேண்டிய சூழல்கூட ஏற்படலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இம்யூனிட்டி பவர் ரொம்ப குறைவாக இருக்கும். அதனால் அவர்களை ரொம்பவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலும் எம்ஐஎஸ்-சி குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும். எனவே அலட்சியம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எம்ஐஎஸ்-சில யாருக்கெல்லாம் ரொம்ப ரிஸ்க்?
"உடல் பருமன், ஆஸ்துமா, இருதய பிரச்சினை, நரம்பு மண்டலம் பாதிப்பு, மெட்டபாலிசம் பிரச்சினைகள் மற்றும் ஜெனிட்டிக் பிரச்சினைகள் இருக்கிற குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே இந்த தொற்று காலங்களில் அவர்களை நாம் மிகவும் ரிஸ்க் எடுத்து பார்த்துக் கொள்ளவேண்டும். கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் இந்த வைரஸால் மிகக் குறைவான குழந்தைகள் மட்டும் தான் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். இதுவரை, எம்ஐஎஸ்-சி (MIS-C) நோயால் கண்டறியப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்."
எம்ஐஎஸ்-சி (MIS-C) பாதிப்பை கண்டறிய உதவுவதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய சில வேறுபட்ட சோதனைகள் உள்ளதா?
"ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோகிராம், மற்றும் எக்கோ கார்டியோகிராம் (இதய அல்ட்ராசவுண்ட்), வயிற்று அல்ட்ராசவுண்ட் ஆகிய சோதனைகள் உள்ளது."
எம்ஐஎஸ்-சிக்கான விழிப்புணர்வு என்ன? பெற்றோர்களுக்கான அறிவுரை?
எம்ஐஎஸ்-சி (MIS-C) உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளை வீட்டிற்குச் சென்ற பிறகு மருத்துவமனைக் குழு, தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் சந்திப்புகளை ஏற்பாடு செய்யலாம். எம்ஐஎஸ்-சி (MIS-C) உடைய குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு குழந்தை இருதயநோய் நிபுணரைப் பார்க்க வேண்டும். எம்ஐஎஸ்-சி (MIS-C) இதயத்தின் சுவரை வீக்கமடையச் செய்யலாம் (மயோர்கார்டிடிஸ்). ஸ்டெராய்டுகள் அல்லது உயிரியல் மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு குழந்தை வாத நோய் நிபுணரைப் பார்த்துக் கொள்வது நல்லது.
வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்று வரும் பெற்றோர்கள், முகக்கவசத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். தாடையில் போட்டுக் கொண்டிருப்பது, கையில் கழற்றி வைத்திருப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது. சானிட்டைசர் வைத்து தங்கள் கைகளை அப்பப்போ சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றி கொள்ள வேண்டும். பெரும்பாலும் மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் அழைத்துச் செல்ல கூடாது. பெற்றோர்கள் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் குழந்தைகள் அருகே செல்ல கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டும். அறிகுறிகள் இருக்கும் அம்மாக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர்க்கவும், தடுப்பூசி போடப்படாத உங்கள் குழந்தைக்கும் உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 3 அடி இடைவெளியை வைத்திருங்கள். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட, அதிக அல்லது கணிசமான பரவல் உள்ள பகுதிகளில், வீட்டிற்குள் முகமூடிகளை அணியுங்கள்.எம்ஐஎஸ்-சி (MIS-C) பயமுறுத்துவதாக இருந்தாலும், இந்த நிலை இன்னும் அரிதாகவே உள்ளது.
முக்கியமாக எம்ஐஎஸ்-சி (MIS-C) யில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கரோனா தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறார்கள் குழந்தைகள் என்பதை நாம்தான் நினைவில் வைத்து இன்னும் கூடுதல் கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். எம்ஐஎஸ்-சி குறித்து அசால்ட்டாக இருந்து விடக்கூடாது."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT