Published : 30 Jul 2020 03:28 PM
Last Updated : 30 Jul 2020 03:28 PM

ஆக்ஸ்போர்டு கரோனா வாக்சின் விலை ரூ.1000-த்திற்கும் குறைவு என்கிறார் சீரம் இந்தியா சி.இ.ஓ.

கரோனா வைரஸுக்கு எதிரான 4 வாக்சின்கள் மனிதர்களில் சோதனை செய்யப்படும் இறுதிக் கட்டத்தி எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

ஆனால் இதன் விலைகள் மற்றும் எந்த நாட்டுக்கு முதலில் வாக்சின் கிடைக்கும் என்பது குறித்தே தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா செனகா, மாடர்னா, ஃபைசர் - பயோ என் டெக், சீன நிறுவனம் சைனோவாக் என்ற 4 வாக்சின்களும் 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகின்றன.

ஃபைசர், மாடர்னா, மெர்க் ஆகிய நிறுவனங்கள் வாக்சினை லாபத்துக்கு விற்க முயற்சி செய்து வருகிற அதே வேளையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தன் வாக்சினை 10 டாலர்களுக்குக் கொண்டு வரப்போவதாகவும் ‘இது அவசரகால பெருந்தொற்று பயன்பாடுகளுக்கே’ என்றும் தெரிவிப்பதாக அயல்நாட்டு ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் முறையான அனுமதிக்கு முன்பே பணக்கார நாடுகள் வாக்சின் தயாரிப்பு நிறுவனங்களுடன் கொள்முதலுக்கு முந்தைய உடன்படிக்கைகளில் இறங்கியுள்ளன. இது ‘வாக்சின் நேஷனலிசம்’ என்று வழங்கப்படுகிறது. இது மிகவும் மோசமானது என்று நிபுணர்கள் சிலர் இப்போதே கண்டித்துள்ளனர்.

ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டுடன் கூட்டுறவு மேற்கொண்டு இந்தியா மற்றும் நடுத்தர, குறைந்த வருவாய் நாடுகளில் ஒரு பில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்ய உடன்படிக்கை மேற்கொண்டுள்ளன. இந்த வாக்சின் ஆகஸ்ட்டில் இந்தியாவில் 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் ஏற்கெனவே ஆக்ஸ்போர்டு வாக்சினுக்கு 100 மில்லியன் டோஸ்களுக்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. பிரேசிலுடனும் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா 1.2 பில்லியன் டாலர்கள் நிதி அளிப்பதற்கு மாற்றாக இந்த வாக்சின் 300 மில்லியன் டோஸ்கள் அளிக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைச் செயலதிகாரி ஆதர் பூனாவாலா இந்த வாக்சினின் விலை 13 டாலர்கள் அல்லது ரூ.1000-த்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார். இந்தியாவில் இது ‘கோவிஷீல்ட்’ என்று அழைக்கப்படும் என்று கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவன வாக்சின் ஒட்டுமொத்த சிகிச்சைக்குமாக இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.3700 முதல் 4,500 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு டோஸுக்கு இந்திய ரூபாயின் படி ரூ.1800 முதல் 2,300 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடர்னாவின் இந்த விலை அமெரிக்கா மற்றும் பிற பணக்கார நாடுகளுக்கானது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x