Published : 29 Mar 2020 09:05 AM
Last Updated : 29 Mar 2020 09:05 AM
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வருபவர்களிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்து கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு நல்ல பலன்கள் தெரிவதாக ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
கரோனாவுக்கு உலகம் முழுதும் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சம் பேர்களாகவும் பலியானோர் எண்ணிக்கை 25,000த்தை நெருங்குவதாலும் எந்த ஒரு சாத்தியமாகக் கூடிய சிகிச்சை முறையும் அது பற்றிய செய்தியும், ஆய்வும் ஊக்கமளிப்பதாகவே அமைகிறது.
convalescent plasma என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் உடலிலிருந்து பிளாஸ்மா எனப்படும் குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவத்தை எடுத்து தீவிரமாகப் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்றி சிகிச்சை அளிக்கும் ஒரு முறையாகும்.
இதுவரை தீவிர வைரஸ் தொற்றுள்ள 5 நபருக்கு மட்டுமே பரிசோதனை அடிப்படையில் இந்த சிகிச்சை முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது, இதன் முடிவுகள் பெரிய அளவில் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாக மருத்துவ, ஆய்வு நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.. அமெரிக்க இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர்கள் சீன விஞ்ஞானிகளான செங்குவாங் ஷென், ஷாவோக்வின் வாங், ஃபாங் ஸாவோ, ஆகியோர்களாவார்கள்.
இந்தக் கட்டுரையில் இவர்கள் கோவிட்-19 மற்றும் தீவிர மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் 5 பேருக்கு பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை அளித்ததில் முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் படி கோவிட்-19 தீவிர நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் என்ற பெரிய நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இது கிளினிக்கல் ட்ரையல்கள் மூலமாகவே நிரூபிக்கப்பட்டு அங்கீகரிக்கப் பட வேண்டியுள்ளது. இந்த சிகிச்சை முறை நன்றாக வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
ஷென்செனில் தொற்று நோய்ப்பிரிவில் இந்த பிளாஸ்மா ட்ரான்ச்ஃபியூஷன் சிகிச்சை அளிக்கப்பட்டது, அதாவது இந்த நோயாளிகளுக்கு தீவிர நிமோனியா, மிகப்பெரிய அளவில் வைரஸ் சுமை அதாவது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கொடுத்தும் அடங்காத வைரல் சுமை இருந்து வந்ததோடு மெக்கானிக்கல் வென் ட்டிலேஷனில் வைக்கப்பட்டிருந்தனர். ஜனவரி 20, 2020 முதல் மார்ச் 25, 2020 வரை இந்த பிளாஸ்மா ட்ரான்ஸ்பியூஷன் ஆய்வு நடத்தப்பட்டதில் 36 வயது முதல் 65 வயது வரை உள்ள இந்த 5 நோயாளிகளுக்கும் பிளாஸ்மா ட்ரான்ஸ்ஃபியூஷன் சிகிச்சைக்குப் பிறகு உடல் வெப்ப அளவு 3-4 நாட்களில் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. தொடர் உறுப்பு பாதிப்பு குறைந்தது. உடலில் வைரல் சுமையும் குறைந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சைக்கு பிறகு 12 நாட்களில் கோவிட்-19 நெகட்டிவ் என்று காட்டியது. 2 வார சிகிச்சைக்குப் பிறகு 3 நோயாளிகள் வென் ட்டிலேஷனிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சுமார் 50 நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பிறகு 3 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் 37 நாட்களுக்குப் பிறகு இவர்கள் உடல்நிலை மிகவும் நார்மலானது தெரிய வந்துள்ளது.
2014-ல் எபோலா வைரஸ் தொற்றின் போது இந்த பிளாஸ்மா ட்ரான்ஸ்பியூஷன் சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த பிளாஸ்மா சிகிச்சை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-மூலம்: தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ்
தமிழ் வடிவம்: இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...