Published : 23 Mar 2020 06:44 PM
Last Updated : 23 Mar 2020 06:44 PM

தெரிந்து கொள்ளுங்கள்: கரோனா வைரஸ் தடுப்புமருந்துகள் ஒரு பார்வை:ஐஎம்சிஆர் பரிந்துரை ஏன்

கோப்புப்படம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோக்யுன் (Hydroxy chloro quine) எனப்படும் மலேரியாவிற்கு எதிராக செயல்படும் மருந்தையும் அஸித்ரோமைஸின் ( Azithromycin)எனப்படும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும் ஆன்டிபயாட்டிக்கையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு(ஐசிஎம்ஆர்) பரிந்துரைத்துள்ளனர்.

அனைவருக்கும் மனதில் எழக்கூடிய ஒரு கேள்வி மலேரியாவிற்கு எதிராகவும், பாக்டீரியா தொற்று எதிராகவும் பயன்படுத்தப்படும் இந்த இரண்டு மருந்துகள் எவ்வாறு வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் என்பதாகும்.
இந்த இரண்டு மருந்துகளின் செயல்பாட்டினை அறிவதற்கு முன்பு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ( immune system) செயல்பாட்டினை நாம் அறிந்திருப்பது மிக அவசியம். பொதுவாக மருத்துவ அறிவியலில் நோய் ஏற்படுத்தும் கிருமிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று செல்களுக்கிடையில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது( Inter cellular pathogens) மற்றொன்று செல்லுக்குள் புகுந்து (Intracellular pathogens) நோய்த்தொற்றை ஏற்படுத்துவது. இதில் அனைத்து வைரஸ்கள் சில பாக்டீரியாக்கள்(Mycobacterium leprae, Listeria monocytogenes etc)மற்றும் ஒட்டுண்ணிகள் வகையைச் சார்ந்த மலேரியா நோயை ஏற்படுத்துகிற பிளாஸ்மோடியம் (Plasmodium vivox) போன்ற உயிரிகள் ஆகும்.

நமது செல்லுக்கு வெளியே இருந்து நமக்கு நோய் தொற்றினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை ஆன்டிபயாடிக் மற்றும் இதர மருந்துகள் கொண்டு கொல்வது எளிது. ஆனால் நமது செல்லுக்குள் புகுந்து நோய் தொற்றினை ஏற்படுத்தும் வைரஸ்கள் பிளாஸ்மோடியம் போன்ற நுண்ணுயிரிகளை மருந்துகள் கொண்டு அழிப்பது என்பது சிரமமான ஒன்று.

அவ்வாறு அதனை அழிக்க முற்படும் பொழுது நமது செல்களும் அழிக்கப்படுவதற்கு சாத்தியங்கள் ஏராளம். குறிப்பாக வைரஸ்கள் நமது செல்களுக்குள் சென்ற பின்பு நமது செல்கள் சுரக்கும் நொதிகளையும்(enzymes) மற்ற புரதங்களை (proteins) பயன்படுத்தியே தன்னை பெருக்கிக்கொள்ளும்.

மேலும் எந்த ஒரு நுண்ணுயிரி நமது உடலுக்குள் வந்தாலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக அதனை எதிர்கொண்டு அதற்கு எதிரான சைட்டோகைனின்(cytokines)எனப்படும் நோய் எதிர்ப்பொருள்களையும் நோய் எதிர் செல்களையும்(immune cells) உற்பத்தி செய்து அல்லது அதனை ஆக்டிவேட் செய்து நோய்க் கிருமிகளை கொல்லத்தொடங்கிவிடும்.

உதாரணமாக மலேரியாவை ஏற்படுத்துவது பிளாஸ்மோடியம் எனும் புரோட்டாஸோவா வகையைச் சேர்ந்ததால் உயிரி. அனோபிலஸ் என்னும் கொசு கடித்த உடன் இந்த பிளாஸ்மோடியமானது நமது இரத்தத்தில் கலந்து இரத்த சிவப்பணுக்களில் புகுந்து அதனை அழித்து தனது பெருக்கத்தினை ஆரம்பிக்கும். முதற்கட்டமாக நமது ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினை சிதைத்து "ஹீமோஸோயின்"(hemozoin) எனும் நிலைக்கு உறுமாறும்.

இந்த நிலையிலிருந்துதான் பிளாஸ்மோடியம் ஆனது ஒவ்வொரு நிலையாக உருமாற்றம் அடைந்து பல்கிப்பெருகி மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தி ரத்தத்தில் கலந்து பிறருக்கும் பரவ ஆரம்பிக்கும். மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோரோகியூன்(HCQ) எனும் மருந்தானது குறைந்த மூலக்கூறு நிறை கொண்டது எனவே எளிதில் நமது ரத்த சிவப்பணுக்களுக்குள் புகுந்து ஹீமோகுளோபின் சிதைபடுவதை தடுத்து "ஹீமோஸோயின்" உருவாவதை தடுத்து நிறுத்துகிறது.

மேலும் இந்த மருந்தானது ருமாட்டாய்டு ஆர்த்ரிடிஸ்(Rheumatoid Arthritis) எனும் மூட்டு வலிக்கும், சிஸ்டமிக் லோபஸ் எரித்த்மேட்டஸ் (Systemic lupus erythmatous) எனப்படும் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த நோய்கள் எந்த நுண்ணுயிரி ஆளும் ஏற்படுவது கிடையாது நமது நோய் எதிர்ப்பு மண்டலமானது, நமது செல்களையே நோய் ஏற்படுத்தும் காரணியாக கருதி சில சமயங்களில் அதிக அளவு நோய் எதிர்ப் பொருள்களை(cytokines)உற்பத்திசெய்து விடுகிறது.

இதனை ஆட்டோ இம்யூன் டிஸிஸஸ்( Auto immune diseases) என்போம் .இந்த நோய் எதிர்ப் பொருள்கள் சொந்த செல்களுக்கு எதிராகவே வினைபுரிந்து நோய்களை ஏற்படுத்துகிறது.இவ்வாறு தனது செல்களுக்கு எதிராகவே சுரக்கப்படும் நோய் எதிர்ப் பொருள்களின் உருவாக்கத்தை கட்டுப்படுத்தி அதன் தாக்கத்திலிருந்து நமது செல்களை பாதுகாக்க ஹைட்ராக்ஸி குளோரோரோகியூன்(HCQ) பயன்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றின் முக்கிய விளைவாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நமது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆனது அதிக அளவிலான சைட்டோகைனினை உற்பத்தி செய்து "cytokinin storm" எனும் நிலையை ஏற்படுத்துகிறது இதனால் நமது நுரையீரல் செல்களை தாக்கத் துவங்குகிறது,

இந்த மருந்தினை பயன்படுத்தும்பொழுது சைட்டோகைனின் உருவாக்கத்தை கட்டுக்குள் வைத்து நமது நுரையீரல் செல்கள் பாதிப்படைவதை தடுத்து தடையற்ற ஒழுங்கான சுவாசம் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது.பல ஆய்வுகளின் முடிவுகள் அடிப்படையில் அசஸித்ரோமைசஸின் எனப்படும் ஆன்டி-பாக்டீரியல் ஆண்டிபயாடிக்கானது ரினோ வைரஸ்(Rhino virus) எனப்படும் மனிதனுக்கு சாதாரண சளி உண்டுபண்ணும் வைரஸை கட்டுப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தினை கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுத்துக்கொள்ளும் பொழுது, அந்த வைரஸின் RNA dependent RNA polymerase எனும் நொதியின் மீது வினைபுரிந்து அதன் பெருக்கத்தை தடை படச்செய்கிறது. இதன் காரணமாக இந்த மருந்துகளையும் மேலும் சில ஆன்டிவைரல் மருந்துகள் சேர்த்தும்(cocktail),மற்றும் இம்யுனொதெரஃபி(immunotherapy)மூலமாகவும் கனவான வைரஸ் கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆண்டிபயாடிக்ஸ் என்பதையும் தாண்டி இவைகள் immune modulator ஆக செயல்படுவதால் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை உட்கொள்ள வேண்டும்.


Dr.K.பார்த்திபன்.
மூத்த விரிவுரையாளர்
நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தடுப்புவியல் துறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x