Published : 23 Mar 2020 11:51 AM
Last Updated : 23 Mar 2020 11:51 AM
‘கரோனா’வைரஸ் பரவுதைத் தடுக்க மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடன் அறிவுரை கூறியுள்ளன.
ஆனால், கிராமப்புறங்களில் 100-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், வரப்போகும் விபரீதம் தெரியாமல் அப்பாவியாக தற்போது வரை பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க சமூக ஆர்வலர்கள் வலியுத்தியுள்ளனர்.
உலகமயமாக்கல் கொள்கையால் கிராமபுறங்களில் விவசாயம் நலிவடைந்ததால் மக்கள் வேலைவாய்ப்பிற்காக நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயருவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்களுக்கான வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தி தருவதற்காக மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தை கொண்டு வந்தது.
இந்தத் திட்டம் அடிப்படையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாளுக்கு குறையாமல் வேலை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டம் மூலம், கிராம புறங்களில் வசிக்கும் ஏழை பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள், கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை தூர்வாருவது, சாலையோர முட்செடிகளை அகற்றுவது, குப்பை மேடுகளை அகற்றுவது, குளங்கள், கண்மாய்களை தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் முதல் ரூ.180 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியமே அவர்களுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால் பிரதமர் மோடி, மக்களை அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், முடிந்தளவு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘கரோனா’ வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் 3-ல் 1பங்கு பேரை மட்டுமே பணிபுரிய வர சொல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர்.பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், தற்போது வரை கிராமப்புறங்களில் 100-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்கள், கூட்டமாக நெருக்கமாக நின்று சாலையோரங்களில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ‘கரோனா’ வைரஸ் பரவுவதில் மக்களை பாதுகாக்க அரசு சொல்லும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அறிவுரைகள் அனைத்தும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினருக்கு மட்டும்தானா? அடித்தட்டு ஏழை மக்களுக்கு இல்லையா? என்ற கேள்வி பலதரப்பிலும் எழாமல் இல்லை.
பிரதமர் மோடியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், மக்கள், அரசு கூறும் சுய சுகாதாரத்தை பின்பற்றுவதில்லை என்று கவலை தெரிவித்தனர். ஆனால், அதே அரசு ‘கரோனா’ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தெரியாத அப்பாவி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டடோர் ஒரே இடத்தில் பணிபுரிவதை ஊக்கவிப்பது முரண்பாடாக உள்ள என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ‘‘100 நாள் வேலைத்திட்டம் முழுக்க கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டம். அவர்களுக்கு வேறு வருவாய் தரக்கூடிய வேலைவாய்ப்பு எதுவும் கிடையாது. அதனால், இந்த திட்டத்தை ‘கரோனா’ முற்றிலும் ஒழிக்கும் வரை நிறுத்தி வைத்து அவர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சுய தொழில் பார்ப்பவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால், அன்றாடம் வேலைபார்க்கும்100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு இன்று வேலைப்பார்த்து கையில் காசு கொண்டுபோனால்தான் அடுப்பில் சாப்பாடு சமைக்க முடியும். அதனால், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாது கட்டுமானத்தொழிலாளர்கள், மூடை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தட்டு மக்களுக்கு தேவையான வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்.
ஆனால், எந்த அடிப்படை ஏற்பாடுகளை செய்யாமலே அரசு மக்களை வீட்டிற்குள் முடக்கப்பார்ப்பதால் மக்கள் அன்றாட வேலைவாய்ப்புக்காக வெளியேறத்தான் செய்வார்கள்.அதற்காக பிரதமரும், முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சர்களும் வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை. அதனால், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு போர்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT