Published : 23 Mar 2020 10:25 AM
Last Updated : 23 Mar 2020 10:25 AM
கரோனா முன்னெச்சரிக்கையாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 23) சட்டப்பேரவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், "கரோனா வைரஸ் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக முதன்முதலில் 9.3.2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுடன் 9 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
12 நாளில் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றியுள்ளது, 8,950 பேருக்கு மேல் தனிமைப்படுத்துப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியும் நோயை எதிர்கொள்ள நமக்கு கிடைக்கும் பொன்னான நேரங்களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் 'பி' மற்றும் 'சி' ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் தமிழ்நாட்டிலும் அது நீட்டிக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது.
நேற்றைய தினம் மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் ரிப்போர்ட் ஆன 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்துவது மட்டுமே கரோனா வைரஸ் தடுப்புக்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது நாமே சட்டப்பேரவையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக்கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்புக்கு உகந்ததாகத் தெரியவில்லை.
நோய் வரும் முன்பே தனிமைப்படுத்திக்கொள்ளாத இத்தாலி நாட்டின் பாதிப்பையும், நோய் குறித்து முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது.
பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் தனிமைப்படுத்திக்கொள்வோம் என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வரும் முன் காப்போம் நடவடிக்கை ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க திமுகவின் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் புறக்கணிப்பு உதவிடும் என்று நம்புகிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT