Published : 22 Mar 2020 06:38 PM
Last Updated : 22 Mar 2020 06:38 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு நன்றி தெரிவிக்க பிரதமரின் யோசனையின் பேரில் புதுச்சேரியில் மக்கள் தொடங்கி துணைநிலை ஆளுநர், முதல்வர், அதிகாரிகள் வரை ஏராளமானோர் கைதட்டி, மணி ஒலித்து நன்றி தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியபோது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்தறை ஊழியர்கள், போலீஸார் மற்றும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும், அதை வெளிப்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 22) மாலை 5 மணிக்கு வீட்டின் முற்றம், மொட்டை மாடி போன்ற இடங்களில் அனைவரும் கூடி நின்று கைகளைத் தட்டி, மணி அடித்து, நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, இன்று புதுச்சேரியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மாடி, முற்றம், தெருக்களிலும், வாயில்களிலும் நின்று கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களையும் பொருட்படுத்தாமல் உழைப்போருக்கு நன்றி தெரிவித்தனர். பலரும் தங்களின் வாழ்த்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸ் வாயிலில் வெளியே வந்து மணியை ஒலித்தார். அதையடுத்து தட்டில் கரண்டியை வைத்து ஒலி எழுப்பியும் தட்டி தனது பாராட்டைத் தெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோரும் தங்களின் பாராட்டை வீடுகளின் மாடியில் நின்று கைதட்டி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT