Published : 22 Mar 2020 05:32 PM
Last Updated : 22 Mar 2020 05:32 PM
கண்களில் கண்ணீர் நிறைந்தது என்று கரோனா பணி குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கவிதையை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனுக்குடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, சென்னை சென்ட்ரல், மெட்ரோ ரயில்களில் ஆய்வு, செய்தியாளர் சந்திப்பு எனத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் இயங்கி வருகிறார்.
இந்நிலையில் கரோனா தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். அதில்,
''அழித்தொழிப்போம் உயிர்க்கொல்லியை!!
கரோனா
உலகை நடுங்கவைக்கும்
ஒற்றை சொல்!
உலகமே பதறிக்கிடக்கிறது!
கண்ணுக்கு தெரியாத இந்த உயிர்க் கொல்லியின்
வேகத்திற்கு எதிராக
துணிந்து நிற்பது மட்டுமல்ல...
ஒவ்வொருவரும்
இடைவெளிவிட்டு தூர நிற்பதே
சாலச் சிறந்தது!
வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றபோது
காற்றுப் புகாத கவச உடையும்
முகக் கவசமும் அணிந்த அவர்களிடம்
கனிவுடன் கேட்டேன்...
உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று...
மருத்துவர் ஒருவர் சொன்னார்..
“சேவை செய்வதே எங்கள் பணி
மனமாரச் செய்கிறோம்
ஆனால் ஒரு சிரமம்...
கவச உடையணிந்துள்ளதால்
தாகத்திற்கு தண்ணீர் குடிக்கதான் முடியவில்லை” என்று
I Was Emotional..
என் கண்களில் கண்ணீர் நிறைந்தது..
மகத்தான மருத்துவ சேவை கண்டு
மலைத்துப் போனேன்
இதையெல்லாம் உணர்ந்து நாம்
விழிப்போடு இருக்கவும்
விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
அறைகூவல் விடுக்கிறேன்...
அசுரத்தனமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே
ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால்
ஊன் உறக்கமின்றி
கால நேரம் பாராது
கணப் பொழுதும் ஓயாது
சுற்றிச் சுழன்று மகத்தான
சேவை செய்கிறது நம் தமிழக அரசு!
மெச்சுகிறேன் நம் மருத்துவத் துறையை!
நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன்!
நம் சேவைகளால்
வெல்லட்டும் மனிதம்!
வீழட்டும் உயிர்க்கொல்லி!!'' என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆழ்துளைக் கிணறில் விழுந்து உயிரிழந்த சுஜித் நினைவாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவிதை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT