Published : 22 Mar 2020 01:28 PM
Last Updated : 22 Mar 2020 01:28 PM

சுய ஊரடங்கு: விஜயகாந்த் இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற நிர்வாகி திருமணம்

விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்.

சென்னை

சுய ஊரடங்கு காரணமாக, தேமுதிக நிர்வாகி ஒருவரின் திருமணம் அக்கட்சியின் நிறுவனர், தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் எளிமையாக நடத்தப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இன்று (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள், பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அண்ணா சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன.

சுய ஊரடங்கு காரணமாக, ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், பல திருமணங்கள் உறவினர்கள், நண்பர்கள் இன்றி மிகக் குறைந்த நெருங்கிய உறவினர்கள் ஆசியுடன் நடத்தப்பட்டன.

இந்நிலையில், தேமுதிக நிர்வாகி விமல் என்பவருக்கும் கமலி என்பவருக்கும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அக்கட்சியின் நிறுவனர், தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் மிக எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் இத்திருமணத்திற்கு முன்னிலை வகித்தனர். விஜயகாந்த் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள சானிட்டைசரும் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, விஜயகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், "விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில், மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் திருமணம் நடைபெற்றது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x