Published : 22 Mar 2020 01:10 PM
Last Updated : 22 Mar 2020 01:10 PM

கரோனா லாக்-டவுன்; காற்றின் தரம் உயர்ந்தது: வெறிச்சோடிய சாலை, மூடிய தொழிற்சாலைகளின் விளைவு

கரோனா பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய சாலை மற்றும் மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பல்வேறு நாடுகளில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, கடந்த மாதம் வூஹானில் நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவு குறைந்துள்ளதாகப் புகைப்படங்களை வெளியிட்டது. சீனா நகரமான வூஹானில்தான் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தொற்று பரவலானதால் நகரமே லாக்-டவுன் செய்யப்பட்டது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், சாலைப் போக்குவரத்து, தொழில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கே சிவப்பு/ஆரஞ்சு வண்ணத்தில் அபாயகரமான அளவில் வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவு தற்போது நீல நிறத்துக்கு மாறி காற்றின் தரம் உயர்ந்துள்ளது.

வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை நைட்ரஜன் டை ஆக்ஸைடின் ஆதாரமாகும். அதேபோல வடக்கு இத்தாலியிலும் வெளியாகும் NO2 அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. சராசரியாக பாதிக்கும் மேல் இதன் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்சிலோனா மற்றும் மாட்ரிட் ஆகிய பகுதிகளிலும் வெளியாகும் வாயுக்களின் அளவு குறைந்துள்ளது. பெய்ஜிங்கிலும் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x