Published : 21 Mar 2020 01:38 PM
Last Updated : 21 Mar 2020 01:38 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எவ்வளவு வலியுறுத்தியும் மக்கள் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது தனக்கு ஆதங்கமாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 21) சென்னையில், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மருத்துவமனையில் இரவு, பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓய்வுபெற்ற மருத்துவர்கள், நிபுணர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அவர்களை அடையாளம் காணவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் பணிக்கு வரலாம் என்பதை வலியுறுத்துகிறோம்.
அந்த மாதிரியான சூழல் இருக்கிறதா எனக் கேட்கக்கூடாது. அந்த மாதிரியான சூழல் இல்லை. ஆனால், இத்தாலி, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கே கரோனா வைரஸ் கடும் சவாலாக உள்ளது. அதனால், நாம் எப்படி இந்த வைரஸை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.
பள்ளி, கல்லூரி விடுமுறையால் மக்கள் விடுமுறை மனநிலைக்குச் செல்லாமல், சீரியஸாக இருக்க வேண்டும். இதனை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறேன். இது நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
சீனாவில் எப்போது கரோனா வைரஸ் ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தயார் நிலையில் இருக்கிறோம். அண்டை நாடுகளுக்கு பரவியபோது துரிதமாக இருந்தோம். அண்டை மாநிலங்களுக்கு வந்தபோது தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம்.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இன்னும் நாம் சீரியஸாக இருக்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆனால், எனக்கு என்ன ஆதங்கம் என்றால், இவ்வளவு தொடர்ந்து வலியுறுத்தியும் மக்கள் சீரியஸாக இல்லை என்பது ஆதங்கமாக இருக்கிறது. அதனால், அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதே அன்பான, கனிவான வேண்டுகோள்".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT