Last Updated : 20 Mar, 2020 04:45 PM

1  

Published : 20 Mar 2020 04:45 PM
Last Updated : 20 Mar 2020 04:45 PM

கரோனா அச்சம்: மும்பை, புனேவில் பணியிடங்களை 31-ம் தேதி வரை மூட வேண்டும்: முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே : படம் | ஏஎன்ஐ.

மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெருநகரங்களான மும்பை, புனே உள்ளிட்டவற்றில் அனைத்துப் பணியிடங்களையும் வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஷட்டவுன் உத்தரவு, மும்பை, மும்பை பெருநகர மண்டலம், புனே, பிம்ப்ரி சின்சாவத், நாக்பூர் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி அதன் வீரியத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன. போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்தும், தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்.

இருப்பினும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக 52 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால், மேலும் மாநிலத்தில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆளும் சிவசேனா கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது.

முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''மாநிலத்தில் உள்ள முக்கியப் பெருநகரங்களான மும்பை, மும்பை பெருநகர மண்டலம், புனே, பிம்ப்ரி சின்சாவத், நாக்பூர் ஆகியவற்றில் அனைத்துப் பணியிடங்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் 25 சதவீத அளவுக்கு மட்டுமே பணிக்கு வந்தால் போதுமானது. முன்பு 50 சதவீத அளவுக்கு பணியாளர்கள் வந்தால் போதுமானது என்ற நிலையில் 25 சதவீத ஊழியர்கள் வந்தால் போதுமானது. அதுவும் சுழற்சி முறையில் வர வேண்டும். மும்பையிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணியிடங்கள் மூடப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, பால் கிடைக்கும். மருந்துக் கடைகள் திறந்திருக்கும்.

பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்றவை நிறுத்தப்படாது. மாநிலத்தின் அத்தியாவசியப் பணிக்காக செல்பவர்களுக்காக பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்படும். பேருந்துச் சேவையை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

மறுபடியும் கேட்டுக்கொள்வதெல்லாம், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருங்கள். பேருந்துகள், ரயில்களில் அதிகமான அளவு பயணிக்க வேண்டாம்.

பணியிடங்கள் மூடப்படுவதால் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதற்குக் கடையின் உரிமையாளர்கள் மனிதநேயம் கருதி அவர்களுக்குக் குறைந்த ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

கரோனா வைரஸுக்கு எதிராக உலகமே பெரும் போர் புரிந்து வரும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் மக்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்.

பேருந்துகளும், ரயில்களும் கடைசி முயற்சியாக நிறுத்தப்படும். ஆனால், அதுவரை அத்தியாவசியப் பணிக்குச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்களுக்காக இயங்கும்.

பேருந்து, ரயில்களில் மக்கள் அதிகமான அளவு பயணிப்பதைத் தவிருங்கள். அடுத்துவரும் 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரோனாவைக் கொல்வதற்கு எந்த ஆயுதமும் இல்லை. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்தாலே கரோனா வைரஸ் அகன்றுவிடும்''.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x