Published : 20 Mar 2020 02:09 PM
Last Updated : 20 Mar 2020 02:09 PM
இந்தியாவில் மெல்லப் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று இன்னும் மக்களுக்கு இடையே பரவும் மூன்றாம் நிலைக்கு வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மக்களவையில் தகவல் தெரிவித்தார்
உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மெல்லப் பரவிவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலில் தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதிவரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால், போன்றவற்றையும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து ஜனதா ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்துப் பேசுகையில், " கரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் இன்னும் 2-ம் நிலையில்தான் இருக்கிறது. 3-ம் நிலையான மக்களுக்கு இடையே வேகமாகப் பரவும் நிலைக்கு வரவில்லை.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அரசு, சூழலைக் கட்டுப்படுத்தி வருகிறது. தேவையான தகவல்களைப் பெற்றஉ சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.
இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 190 பேரைக் கடந்துள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்பவர்களுக்குத் துல்லியமான அறிவியல்பூர்வமான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகிறது.
உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்பில் இருந்து வருகிறது, அவர்களின் அறிவுரைப்படி பல்வேறு நேரங்களில் செயல்படுகிறோம். அதுமட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு அறிவியல் வல்லுநர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் பெற்று வருகிறோம். ஆதலால், கவலைப்படும் வகையில் எந்தவிதமான தகவலும் வந்ததாக நான் நினைக்கவில்லை.
இவ்வாறு ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT