Published : 20 Mar 2020 10:53 AM
Last Updated : 20 Mar 2020 10:53 AM
கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்ள முகக் கவசங்கள் பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடும் அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 நோய்த் தொற்று 173 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இகுறித்து மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
''ஏற்கெனவே ஆடை மற்றும் முகக் கவசங்கள் உட்பட மக்களை வான்வழித் துகள்களிலிருந்து பாதுகாக்கப் பயன்படும் அனைத்து வகையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய ஜனவரி 31-ம் தேதி இந்தியா தடை விதித்துள்ளது,
இருப்பினும், பிப்ரவரி 26-ம் தேதி அன்று, தடை செய்யப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களின் பட்டியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகையான எரிவாயு முகக் கவசங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கத்திகள் உட்பட 8 பொருட்களை அரசாங்கம் நீக்கியது.
கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்நாட்டிலேயே முகக் கவசம், வென்டிலேட்டர் உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனால் உள்நாட்டிலேயே உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்ள முகக் கவசங்கள் மற்றும் முழுநீளப் பாதுகாப்பு ஆடை தயாரிக்கப் பயன்படும் ஜவுளி மூலப்பொருட்களை மற்றும் அனைத்து வென்டிலேட்டர்கள், அறுவை சிகிச்சை / ஒருமுறை பயன்பாட்டு முகக் கவசங்களை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் நேற்று தடை விதித்தது.
அனைத்து வென்டிலேட்டர்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் முகக் கவசங்களுக்கு மட்டுமே ஜவுளி மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும், கையுறைகள், கண் மருத்துவம் தொடர்பான உபகரணங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், பயாப்ஸி பஞ்ச் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய எந்தத் தடையுமில்லை''.
இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT