Published : 19 Mar 2020 04:50 PM
Last Updated : 19 Mar 2020 04:50 PM
கரோனா பாதிப்பினால் 3-வது நபர் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. அயர்லாந்திலிருந்து சென்னை திரும்பிய இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் 3-வது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் விதத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 750 பேர் பரிசோதனைக்கு ஆளாகியுள்ளனர். 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம், ரயில் நிலையங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் ஓமனிலிருந்து சென்னை வந்த காஞ்சிபுரம் பொறியாளர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிய ஆம்பூர் இளைஞர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எண்ணிக்கை இரண்டானது. இந்நிலையில் 3-வது நபருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“அயர்லாந்தின் டப்ளின் நகரிலிருந்து சென்னை திரும்பிய 21 வயது இளைஞருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றுடன் கடந்த 17-ம் தேதி சென்னை திரும்பிய அவர், அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். நேற்று (18/3) அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் நிலையான நிலையில் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்”.
#coronaupdate: 21 Y student from Dublin,Ireland tested positive for #Covid19. On his arrival on 17.3 @Chennai,he was screened & home quarantined.Y’day18.3 he reported to RGGH with symptoms.Samples sent for testing y’day,confirmed positive today. Pt is stable in isolation at RGGH.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 19, 2020
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT