Published : 18 Mar 2020 08:28 PM
Last Updated : 18 Mar 2020 08:28 PM
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறலுடன் அனுமதிக்கப்பட்ட ஓடிசா மாநில இளைஞர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஓடிசாவைச் சேர்ந்த சந்திரலால் மகன் காளி(18). இவர் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்குச் சென்ற காளி, மீண்டும் வேலை வருவதற்காக கடந்த 3 நாட்களாக ரயிலில் பயணம் செய்துள்ளார்.
நேற்று ஊருக்கு வந்த அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்ம இன்று காலை ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, காளிக்கு அதிகமாக மூச்சுத் திணறல், இருமல் இருந்தது.
மேலும், காய்ச்சலும் இருந்ததால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மேல்சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் சிகிச்சை தனி வார்டில் காளி அனுமதிக்கப்பட்டு. கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கூறும்போது, "கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சுவாசக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வகம் தமிழகத்தில் சென்னை, தேனி, திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் தான் உள்ளன.
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த ஓடிசா மாநில இளைஞருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. ஆனால், அவருக்கு கரோனா பாதிப்பு என்பதை உறுதி செய்ய முடியாததால், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், கரோனா பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் ஏற்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT