Published : 18 Mar 2020 10:49 AM
Last Updated : 18 Mar 2020 10:49 AM
கரோனா வைரஸைப் பொறுத்தவரை இந்தியா தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா சுமார் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுளது. இந்த வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா குறித்துக் கூறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இயக்குநர் பலராம் பார்கவா கூறும்போது, ''நாம் எல்லோரும் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய சூழலில் மூன்றால் கட்டத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது கட்டம் என்பது சமூகத்துக்குப் பரவுவதாகும். அதை நாம் எட்டிவிடக் கூடாது என்று நம்புகிறேன்.
சர்வதேச எல்லைகளை மூடுவது, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து சமூகப் பரவலைத் தடுக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
கரோனா - நான்கு கட்டங்கள் என்னென்ன?
முதல் நிலை: பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவது.
2-ம் நிலை: பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை அறுத்தெறிய முடியும்.
3-ம் நிலை: இது சமூகத் தொற்று ஏற்படும் கட்டம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்றே தெரியாமல் சமூகத்தில் பரவலான மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3-ம் கட்டத்தில் உள்ளன.
4-ம் நிலை: இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது தொற்று குணமாகும், முடியும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT