Published : 17 Mar 2020 03:02 PM
Last Updated : 17 Mar 2020 03:02 PM
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 450 பேரை மீட்பதில் அலட்சியம் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில், "ஈரான் நாட்டு தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 450 பேர் உட்பட 783 மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து பல வாரங்களாகியும் அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரானிலுள்ள இந்தியத் தூதரகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
உலக அளவில் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த நாட்டிலுள்ள கிஷ் மற்றும் சிருயா தீவுகளில் உள்ள மீன்பிடி நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 450 மீனவர்கள் உட்பட 783 இந்திய மீனவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஈரானில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கிய நிலையில், அந்த மீனவர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், ஈரான் மீன்பிடி நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாத நிலையில், அவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வரும் இதுகுறித்து வெளியுறவுத்துறைக்கு கடந்த 28-ம் தேதி கடிதம் எழுதினார்.
ஆனால், அதன்பின் சுமார் மூன்று வாரங்களாகியும் ஈரானில் தவிக்கும் 783 மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகமும் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. இந்திய மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்த நிலையில், ஈரானில் உள்ள தூதரகம் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்ட மீனவர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதைக் கேட்ட தூதரக அதிகாரிகள் பண்டர் அப்பாஸ் நகரில் உள்ள துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளும்படி ஆலோசனை வழங்கியதுடன் அதன் கடமையை முடித்துக் கொண்டது.
பண்டர் அப்பாஸ் துணைத் தூதரக அதிகாரிகள், முதலில் கிஷ் தீவுக்குச் சென்று மீனவர்களைச் சந்திப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில் கிஷ் தீவுகளுக்குள் வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி மீனவர்களுடனான சந்திப்பை ரத்து செய்து விட்டனர். கிஷ் தீவுகளில் கரோனா அச்சம் தணித்து, வெளியாட்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகுதான் தமிழக மீனவர்களைச் சந்திக்க முடியும் என்று பண்டர் அப்பாஸ் நகரிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
கிஷ் தீவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்பட்ட அச்சம் காரணமாகத்தான் தங்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு இருக்கும்போது கரோனா அச்சம் விலகிய பிறகு மீனவர்களைச் சந்திப்பதாக தூதரக அதிகாரிகள் கூறுவது அலட்சியத்தின் உச்சம் ஆகும்.
கிஷ் தீவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் பணியாற்றும் மீன்பிடி நிறுவன உரிமையாளரின் சகோதரருக்கு கரோனா வைரஸ் தொற்றியிருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில் தங்களையும் கரோனா தாக்கி விடும் என்ற அச்சத்தில் தமிழக மீனவர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
ஒருபுறம் கரோனா வைரஸ் அச்சம் என்றால், மறுபுறம் அவர்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்பதில் துடிப்புடன் செயல்பட்ட வெளியுறவுத் துறை, ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்பதில் மட்டும் அலட்சியம் காட்டக்கூடாது.
கிஷ் தீவில் விமான நிலையம் உள்ள நிலையில் வெளியுறவுத்துறை நினைத்தால், ஈரான் வெளியுறவுத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று ஓரிரு நாட்களில் இந்திய மீனவர்களை மீட்க முடியும். ஆனால், 3 வாரங்களாகியும் இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்பது தெரியவில்லை.
ஈரானில் தவிக்கும் 450 தமிழக மீனவர்களின் கதி என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் அவர்களின் குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், 450 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 783 இந்திய மீனவர்களையும் அடுத்த சில நாட்களுக்குள் மீட்டு, தாயகம் அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT