Published : 16 Mar 2020 06:18 PM
Last Updated : 16 Mar 2020 06:18 PM
கரோனா வைரஸ் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டும்; வீட்டுக்குத் திரும்ப வேண்டும் வேறெதுவும் கவனம் வேண்டாம் என்று கூறி நாட்டு மக்களுக்கு செக் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவில் தோன்றி உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை 6500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பாவில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இத்தாலி ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் இயல்பு வாழ்க்கையை இந்நோய் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் 10.7 மில்லியன் மக்கள் உள்ள மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசு 5 டன் மருத்துவப் பொருட்களுடன் ஒரு விமானத்தை சீனாவுக்கு அனுப்பி உதவிக்கரம் நீட்டியது.
அதேநேரம் சென்ற வார இறுதியில் முகக் கவசங்கள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. சுகாதார அமைச்சர் ஆடம் வோஜ்டெக், மக்களுக்கு அளிப்பதற்கு ஒரு மில்லியன் முகக் கவசங்கள் குறைவாக இருப்பதாகக் கூறினார்.
தற்போது சீனாவிலிருந்து 1.1 மில்லியன் சுவாசக் கருவிகள் மற்றும் முகக் கவசங்கள் வந்தடைந்திருப்பதை செக் அரசு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களும் உதவி வருகின்றன. வெளிநாட்டவர்கள் இனி செக் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், திங்கள்கிழமை வரை செக் மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்நிலையில் செக் குடியரசு புதியதாக தன் நாட்டு மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செக் குடியரசின் பிரதமர் ஆன்த்ரேஜ் பாபிஸ் தன் நாட்டு மக்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''செக் நாட்டில் இதுவரை 293 பேருக்கு கரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புகள் எதுவுமில்லை என்பது ஆறுதல் என்றாலும் மக்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டுமென அரசு விரும்புகிறது.
செக் மக்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும். இதை மட்டும் செய்தால் போதுமானது. மேலும், அவசியத் தேவைகளின் பொருட்டு ஷாப்பிங் செல்லவும், அவர்களது குடும்பத்தினரையோ அல்லது ஒரு மருத்துவரையோ பார்க்க, தங்கள் செல்லப் பிராணிகளைக் கவனித்துக்கொள்ள, பெட்ரோல் வாங்க அல்லது இயற்கையுடன் நேரத்தைச் செலவிட மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கட்டுப்பாடு மார்ச் 24-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
முடிந்தவரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு முதலாளிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர்கள் சந்திப்பவர்களிடமிருந்து இரண்டு மீட்டர் (ஆறு அடி) தூரத்தை வைத்திருக்கவும், முடிந்தால் பணத்திற்குப் பதிலாக மக்கள் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு ஆந்த்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT