Published : 14 Mar 2020 07:14 PM
Last Updated : 14 Mar 2020 07:14 PM
கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக அரவிந்த்சாமி சில யோசனைகளைத் தெரிவித்து, கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போது கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் அரவிந்த்சாமி.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”சர்வதேச அளவில் இருக்கும் வைரஸ் தொற்று பற்றி என் சிந்தனைகள். உலகின் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதைக்குக் குறைவாகவே உள்ளது. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நம்மில் பலரில் யார் அந்த தொற்றைக் கொண்ட அறிகுறியல்லாதவர்கள் என்று நமக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை தொற்றை நாம் நிறுத்தக் கூடிய, நிறுத்த வேண்டிய முக்கியமான கட்டம் இதுவே.
அடுத்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை தற்காலிகமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட, பொது நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் ஒத்திவைக்க அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
ஏற்கெனவே சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இதை நாம் தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நிகழ் நேரத்தில் கிடைக்கும் விஷயங்களை, இந்த கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற அரசுகளின் ஆய்வுகளை வைத்து, அதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படும் என நான் நம்புகிறேன்.
மனித இனத்துக்கு இப்படியான சர்வதேச நெருக்கடி நேரும்போது, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.
அனைத்து அமைப்புகள், நிறுவனங்களும், அவர்கள் பணியிடத்தில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏற்றவாறு நாம் தயாராகி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இது சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழல் மற்றும் அதன் தாக்கம். அரசாங்கம் மட்டும் தனியாக இதை எதிர்த்துப் போராட முடியாது. அதனால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து, கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அறிகுறிகள் இருந்தால் அதை உரியவர்களுக்குத் தெரிவித்து, இந்த தொற்று பரவ வாய்ப்பு இருக்கும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டியிருக்கும் விழாக்களை நடத்தாமல், இது போன்ற சூழலில் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
அமைதியாக, பாதுகாப்பாக இருங்கள்”.
இவ்வாறு அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
COVID-19. My thoughts on a few things that need to be done.. pic.twitter.com/Wc1cIdc06U
— arvind swami (@thearvindswami) March 13, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT