Published : 14 Mar 2020 05:15 PM
Last Updated : 14 Mar 2020 05:15 PM
கரோனா வைரஸ் காரணமாக, நேபாள நாடு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மலையேறுதல் உள்ளிட்ட பயணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் சுமார் 20,000 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களைக் காப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
கரோனா வைரஸ் அச்சத்திலிருந்து தப்பிக்காத நேபாளம் நாடும் அனைத்து நாடுகளிலிருந்தும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைத் தடுக்க முயன்று வருகிறது. இதற்காக சுற்றுலா விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் மலையேறுதல் பயணங்களுக்கும் நேபாளம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நேபாளம் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த ஒரு பிரதேசமாகும். இங்கு உலகின் மிக உயரமான மலைகள், அழகிய பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகள் உள்ளன. எவரெஸ்ட் சிகரம் இங்குதான் உள்ளது. இமயமலையில் மலை ஏற்றம் வசந்த காலத்தில் மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிகிறது. மலையேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் மலை ஏறுவதற்காக பல நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்,
நேபாளத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டும்தான் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நேபாள அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை அன்று அனைத்து நாடுகளுக்கும் வருகை தரும் சுற்றுலா விசாக்களை நிறுத்தியது. எவரெஸ்ட் ஏறுதல் உட்பட அனைத்து வசந்தகாலப் பருவத்தின் மலையேறுதல் பயணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
இதனால் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட சுமார் 20,000 பேர் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குப் பிறகு நேரடியாக வேலை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் 16,248 மலையேற்ற வழிகாட்டிகள் மற்றும் 4,126 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர்.
வருடாந்திர உலகச் சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் ஆராய்ச்சி அறிக்கையின்படி, நேபாளத்தின் சுற்றுலாத் துறை ரூ.240.7 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் நேபாள நாட்டிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.05 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வேலை வழங்கியது.
மலையேறுபவர்களால் வாழும் 1 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு
இதுகுறித்து நேபாளத்தின் மலையேற்ற முகவர் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் நபின் ட்ரிடல் கூறுகையில்,
''மலையேற்றத்தையொட்டி சுமார் 1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து மலையேறுபவர்கள் மற்றும் மலையேறுபவர்களின் செலவினங்களால் வாழ்பவர்கள் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தை உலுக்கிய விசா ரத்து
நேபாளச் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் பாய் கிருஷ்ணா கட்கா கூறுகையில், ''எவரெஸ்ட்டையும் இந்த விசா முடிவு கடுமையாகப் பாதிக்கும். மலையேற்றப் பாதைகளிலும் வழிகாட்டிகள், போர்ட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் அடங்கிய முழு பொருளாதாரமும் வசந்த மலையேறுதலில் வாழ்கிறது.
உலக அளவில் கோவிட் -19 பாதிப்பின் பரவல் நாட்டில் பிப்ரவரி முதல் ஹோட்டல் மற்றும் பயண முன்பதிவுகளை ரத்து செய்ய வழிவகுத்தது. பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து முன்பதிவுகள் ரத்து செய்யப்படும்போது நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை ரத்து செய்த முடிவு பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது. ஆனால் இது ஒரு தற்காலிக கட்டுப்பாடாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சுற்றுலாப் பயணிகள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT