Last Updated : 12 Mar, 2020 05:18 PM

 

Published : 12 Mar 2020 05:18 PM
Last Updated : 12 Mar 2020 05:18 PM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளத்தை வெளியிட்டால் நடவடிக்கை : புனே நிர்வாகம் எச்சரிக்கை

கோப்புப்படம்

புனே

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அடையாளத்தை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே நகர நிர்வாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 73 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 11 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புனே நகரைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் எனும் விவரத்தை சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டனர்.

இதுகுறித்து நோயாளியின் உறவின் புனே நகர நிர்வாக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, புனே மண்டல ஆணையர் தீபக் மைசேகர் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கரோனோ வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீதும், பதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புனே மண்டல ஆணையர் தீபக் மைசேகர் நிருபர்களிடம் கூறுகையில், " கரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்திகளைப் பரப்புவோர்களைக் கண்காணிக்க சைபர் கிரைம் போலீஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அதேபோல கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம், முகவரி, பெயர் ஆகியவற்றை வெளியிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர் குறித்த அடையாளத்தை வெளியிட்டால், அவர் சார்ந்த குடும்பத்தை அது சமூகத்தில் வெகுவாக பாதிக்கும். ஆதலால், சமூக பொறுப்புடன் இந்த விஷயத்தில் நடந்து கொண்டு, யாரும் வெளியிடாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பல நாட்களாக இந்த கோரிக்கையை நாங்கள் வைத்தாலும் சிலர் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புவது, தவறான தகவல்களைத் தெரிவிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில்தான் ஒரு புகார் பெறப்பட்டுள்ளது.

நோயாளியின் அடையாளத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x