Published : 12 Mar 2020 04:07 PM
Last Updated : 12 Mar 2020 04:07 PM
கரோனா வைரஸ் பாதிப்பால், இந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை அரங்கில் நடத்துங்கள் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 15-ம் தேதி வரை வெளிநாட்டினருக்கு விசா அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளி்ல் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை விளையாட வாய்ப்பில்லை. மேலும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுமா என்பது குறித்து வரும் சனிக்கிழமை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 73 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு மேலும் பரவாமல் இருக்கும்பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மக்கள் கூட்டம் கூடும் இடங்கள், விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்யவோ அல்லது ரசிகர்கள் இல்லாமல் நடத்தவோ மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இம்மாதம் 29-ம் தேதி ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கும் நிலையில், அந்தப் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால், மக்கள் அதிகமாகக் கூடும் ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டுகளைத் தவிர்க்கலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்துங்கள் பிசிசிஐக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத்துறை செயலாளர் ராதே ஷியாம் ஜுலனியா நிருபர்களிடம் கூறுகையில், "விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். அதில் தடையில்லை. ஆனால், ரசிகர்கள் வராமல் நடத்த வேண்டும். தேசிய விளையாட்டு ஆணையம், பிசிசிஐ ஆகியவற்றிடம் இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரைகளைக் கேளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் ரசிகர்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். அதேசமயம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரையைக் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத சூழல் இருக்கிறது. அதன் பின்புதான் பி2 விசா பெற்று விளையாட முடியும். ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைத்தால், வெளிநாட்டு வீரர்களுக்குப் போதுமான கால அவகாசம் கிடைக்காமல் அவர்கள் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படலாம்.
ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் டி20 போட்டி நடத்தினால் தங்களுக்கு எந்தவிதமான லாபமும் இல்லை. டிக்கெட் வருமானம் இருக்காது என்று அணியின் நிர்வாகங்கள் கூறுகின்றன. இதனால் ஐபிஎல் போட்டி ரசிகர்கள் வருகையின்றி நடக்குமா அல்லது இந்த ஆண்டு ரத்து செய்யப்படுமா என்பது கேள்வியாக இருக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT