Published : 12 Mar 2020 03:23 PM
Last Updated : 12 Mar 2020 03:23 PM
கரோனா வைரஸ் கடும் பாதிப்புக்குள்ளான ஈரானில் சிக்கியுள்ள 6000 இந்தியர்களை மீண்டும் அழைத்து வருவதே இந்தியாவின் முக்கிய கவனமாக உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 119 நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
''கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள இந்தியா தயாராக உள்ளது. அதேநேரம் ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலைமை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். தாங்களாகவே சொந்தப் பயணம் மேற்கொள்வதை அரசு பரிந்துரைக்காது என்பது வலியுறுத்தப்படுகிறது.
அதேநேரம் கரோனா வைரஸ் குறித்த பீதியைப் பரப்பாமல் சிக்கலைத் தீர்க்க நிதானமாக, பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் இந்தியா இந்தப் பிரச்சினையை திறம்பட எதிர்கொள்கிறது. அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு மட்டுமே தீங்கு விளைவிக்கும்.
ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் முயற்சிகளும் ஆரம்பக்கட்ட அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்கள், அந்நாட்டில் உள்ள கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிராந்தியங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறித்து அவர்களிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் பல்வேறு மாகாணங்களில் சுமார் 6,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 1,000 பேர் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள். இது தவிர லடாக், கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1,000 பேர் மற்றும் 300 மாணவர்கள் ஆகியோர் அந்நாட்டில் சிக்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரிலிருந்து ஈரான் சென்றுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பவர்கள். எனவே, அவர்கள் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
இந்திய மீனவர்கள் தங்கியுள்ள மாகாணம் வைரஸால் அதிகம் பாதிக்கப்படவில்லை. இந்திய பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்து தரும்.
ஈரானில் கோம் என்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்களை மீண்டும் அழைத்து வருவது நமது முதன்மை கவனமாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வணிக விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்க அங்குள்ள இந்திய அதிகாரிகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது.
மருத்துவ நிலைமையை நிர்வகிக்க உதவ, ஆறு மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர். முதல் சுற்று சோதனையில் 108 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்றில் 529 பேர், ஸ்ரீநகரைச் சேர்ந்த சில மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்து அவர்களிடம் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளேன்''.
இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT