Last Updated : 12 Mar, 2020 01:01 PM

1  

Published : 12 Mar 2020 01:01 PM
Last Updated : 12 Mar 2020 01:01 PM

கரோனா வைரஸ் அச்சறுத்தல்: ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் டி20 போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு அனைத்து விசாக்களையும் ரத்து செய்துள்ளதையடுத்து, 13-வது ஐபிஎல் டி20 போட்டியில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டர்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 4 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் மெல்ல இந்தியாவுக்குள் வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸுக்கு 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தல் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளும் பல விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்து வருகின்றன.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், பணி நிமித்தமாகச் செல்பவர்கள் ஆகியோரைத் தவிர அனைவருக்கும் ஏப்ரல் 15-ம் தேதி வரை விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 29-ம் தேதி முதல் 13-வது ஐபிஎல் டி20 போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியைக் காண அதிகமான ரசிகர்கள் மைதானத்துக்கு வருவார்கள் என்பதால் போட்டியை ஒத்திவைக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த சூழலில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெளிநாட்டவருக்கு மத்திய அரசு விசாவை ரத்து செய்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக ஐபிஎல் டி20 போட்டியில் விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில்தான் வருவார்கள். ஆனால், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய அரசு விசாவை ஏப்ரல் 15-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. இதனால் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள். அதன்பின் பி2 விளையாட்டு விசாவில் வர வாய்ப்புள்ளது.

ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது, அது கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கவலை தெரிவிக்கின்றனர். உண்மையில், ரசிகர்கள் இல்லாமல் கூட ஐபிஎல் போட்டியை நடத்திவிடலாம். ஆனால், ஐபிஎல் போட்டியை ஒத்திவைத்தால் 60 வெளிநாட்டு வீரர்களை இந்த ஆண்டு மீண்டும் ஒன்று திரட்ட இயலாது. பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு விளையாடச் சென்றுவிடுவார்கள்" எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே வரும் 14-ம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது. ஐபிஎல் போட்டி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கும் உச்ச அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுதான் , ஐபிஎல் போட்டி ரத்து செய்வது, ஒத்திவைப்பது குறித்த முடிவை அறிவிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x