Published : 12 Mar 2020 09:25 AM
Last Updated : 12 Mar 2020 09:25 AM

பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியில் கோவிட் - 19 பாதிப்பைக் கண்டறிய எவ்வளவு நேரம் ஆகும்? - மருத்துவக் கல்வி துணை இயக்குநர் தகவல்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 ஆய்வகத்தை மருத்துவக் கல்வி துணை இயக்குநர் ஜெகநாதன் ஆய்வு செய்தார்.

ஆண்டிபட்டி

ரத்த மாதிரியைப் பரிசோதித்து கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய சுமார்மூன்றரை மணி நேரம் ஆகும் என மருத்துவக் கல்வித் துணைஇயக்குநர் ஜெகநாதன் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நாட்டில் 51 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக் கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை கிங்ஸ்நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சிமையம் மற்றும் தேனி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டது.

தேனி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகத் துணை இயக்குநர் ஜெகநாதன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்யும் வசதி, அவற்றைக் கையாள்வதற்கான நவீன கருவி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, தேனியில் சர்வதேசத் தரத்திலான ஆய்வகம் இருப்பதாலேயே, மத்திய அரசு, இங்கு ஆய்வகம் அமைக்க முடிவு செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துகோவிட்-19 வைரஸ் பாதிப்பை கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இங்கு அனுப்பப்படுகின்றன. இவற்றைப் பரிசோதித்து ஆய்வு விவரங்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஒரு ரத்த மாதிரியில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளதா எனக் கண்டுபிடிக்க சுமார் மூன்றரை மணி நேரம் ஆகலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x