Published : 12 Mar 2020 09:19 AM
Last Updated : 12 Mar 2020 09:19 AM
மக்களிடம் அச்சம் பரவுவதைத் தடுக்க கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு தகவல்களைரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அரசுக்கு இந்திய மருத்துவச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவாகிய கோவிட் - 19 வைரஸ், தற்போது ஈரான், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை, 60-க்கும் மேற்பட்டோர் கோவிட் - 19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிட் - 19 வைரஸ் பரவி வரும் நிலையில், மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு நம்பிக்கை தருபவர்களாக விளங்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல் தொடர்பான நம்பகமான தகவல்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும்.
கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு விவரங்களை தினமும் வெளியிடுவதால் நாடு முழுவதும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவரங்களை அரசாங்கம் ரகசியமாக வைத்திருந்து நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மருத்துவ சங்கத்தைப் பொறுத்தவரை, அதன் அனைத்து கிளைகளிலும் கோவிட் -19 வைரஸை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT