Published : 12 Mar 2020 08:11 AM
Last Updated : 12 Mar 2020 08:11 AM
கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து காஞ்சிபுரம் பொறியாளர் குணமடைந்துவிட்டார் என்று 2-வது பரிசோதனை செய்வதற்கு முன்பே சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் 45 வயது பொறியாளர் பெருமாள். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லாததால், அவரை அனுப்பிவிட்டனர்.
வீட்டுக்கு சென்ற அவருக்கு ஓரிரு தினங்களில் வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கடந்த 4-ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வந்த அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது ரத்த மாதிரிகளை எடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் ஒருமுறை அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக புனே ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவிலும் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
தமிழகத்தில் யாருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கடந்த 7-ம் தேதி அறிவித்தது. அதன்பின்னர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு (பாசிட்டிவ்) இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்த பின்னர் பரிசோதனையில் குணமாகியிருப்பது (நெகட்டிவ்) உறுதி செய்யப்பட்டாலும், மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பொறியாளரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டது. இரவில் வந்த பரிசோதனை முடிவில் அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகியிருப்பது (நெகட்டிவ்) தெரியவந்தது. அவருக்கு 2-வது பரிசோதனையை ஓரிரு நாட்களில் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த 2-வது பரிசோதனையை செய்வதற்கு முன்பாகவே, நேற்று முன்தினம் இரவு சுகாதாரத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காஞ்சிபுரம் பொறியாளர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிவிட்டார். தமிழகம் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லா மாநிலமாக உள்ளது என்று பதிவு செய்தார்.
2-வது பரிசோதனை செய்வதற்கு முன்பே அமைச்சர் இவ்வாறு அறிவித்திருப்பது சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT