Published : 11 Mar 2020 01:47 PM
Last Updated : 11 Mar 2020 01:47 PM
கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஏற்கெனவே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி நாட்டு மக்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் இப்போது இந்த 3 நாடுகளும் கூடுதலாகச் சேர்ந்துள்ளன.
உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா வைரஸ் தாக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்தியாவுக்குள் மெல்லப் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா நேற்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட நள்ளிரவில் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சீனா, ஹாங்காங், கொரியா, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகம் திரும்பும் அனைத்துப் பயணிகளும் தாங்களாகவே அடுத்த 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் நிறுவனத்தில் பணி நிமித்தமாகச் சென்றுவிட்டு வந்தால், அடுத்த 14 நாட்களுக்கு அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
ஏற்கெனவே இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்ற பட்டியலில் கூடுதலாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இணைகின்றன.
மார்ச் 11-ம் தேதிக்கு முன்பாக பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின் நாட்டவர்களுக்கு வழக்கமான விசா, இ-விசா போன்றவை வழங்கப்பட்டு அவர்கள் இன்னும் இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தால் அவர்களுக்கு விசா ரத்து செய்யப்படும். மேலும், இந்த 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கரோனா பாதித்த நாடுகளுக்குப் பிப்ரவரி 1-ம் தேதிக்கு மேல் சென்றிருந்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழையாமல் இருந்தாலோ அவர்கள் அனைவருக்கும் விசா ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்தியக் கடற்கரைக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவுக்குள் வருவது குறித்து அறிவிக்கப்பட்ட கப்பல்கள் அனுமதிக்கப்படும். ஆனால், பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பின் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய நாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கப்பல்கள் இந்திய கடற்கரைக்குள் மார்ச் 31-ம் தேதி வரை நுழைய அனுமதிக்கப்படாது.
இந்தியத் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் இருக்கும் பயணிகள், ஊழியர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். ஏதேனும் ஊழியருக்கோ அல்லது பயணிக்கோ கரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால், அவர்கள் கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். கப்பலிலேயே தங்க வைக்கப்படுவார்கள்.
அந்தக் குறிப்பிட்ட நபருக்கு கரோனா இருப்பது தெரியவந்தால், அடுத்த 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார். கப்பலும் அங்கிருந்து நகர அறிவுறுத்தப்படும்
மேலும், கப்பலின் ஏஜெண்ட் கப்பல் எந்தெந்த நாட்டுக்கெல்லாம் பயணித்தது தொடர்பான விவரங்களையும், கப்பலில் உள்ள பயணிகள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்து பயணிக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட எந்த பயணியையும் கப்பலில் அனுமதிக்கக்கூடாது. துறைமுகத்தில் உள்ள அதிகாரியிடம் பயணிகள் சுய விவரங்களைப் படிவத்தில் குறிப்பிட்ட பின் அங்கிருந்து செல்ல வேண்டும்
மேலும், சீனா, ஹாங்காங், ஈரான், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்குக் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக பயணித்திருந்தால் அந்தக் கப்பல்களுக்கு இந்தியாவில் நுழைய அனுமதியில்லை. அதேபோல, சீனா, ஹாங்காங், மக்காவு, தென் கொரியா, ஈரான் இத்தாலி அல்லது கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்குக் கடந்த 14 நாடுகளுக்கு முன் சென்ற பயணிகளுடன் தொடர்பு வைத்திருந்த யாரும் கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT