Published : 11 Mar 2020 01:26 PM
Last Updated : 11 Mar 2020 01:26 PM
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் ஒரே பெயர் கரோனா வைரஸ். இயற்கைச் சூழலில் ஏற்கெனவே பல வைரஸ்கள் இருக்கின்றன. அதைப்போல, கரோனாவும் (கோவிட்-19) ஒரு வைரஸ்தான். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு, இதற்கு முன் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ்களைக் காட்டிலும் கரோனாவுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, அச்சமூட்டப்படுகிறது.
உண்மையில் கடந்தகாலப் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கோவிட்-19 வைரஸ் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. இப்போது நம்மிடையே இருக்கும் அச்சமும் தேவையற்றவைதான்.
அதற்காக முகக் கவசம், கை கழுவுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டாமா என்று கேட்கிறீர்களா? அப்படியல்ல.
கை கழுவுதல் என்பது கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறை மட்டுமல்ல, எப்போதும், வாழ்நாள் முழுவதும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார முறைகளில் ஒன்று. மற்றொன்று முகக் கவசம். நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுய பாதுகாப்பாகவும் நாம் செய்து கொள்வது. இவை இரண்டையும் கரோனா வைரஸ் பாதித்த இப்போதைய காலத்தில் மட்டுமல்ல எப்போதும் பின்பற்றினாலும் நம்மைப் பாதித்த வைரஸ்கள் மற்றவருக்குச் செல்லாது.
வைரஸ் எப்படி பரவுகிறது?
முதலில் வைரஸ் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. புரதம் மற்றும் நுண்ணுயிரிகள் கொண்டதுதான் வைரஸ். இந்த வைரஸ் பரவுதலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.
எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை நோய், மலேரியா போன்றவை.
எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமான மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். மழைக்காலத்தில் திடீரென அதிகமானோருக்கு வரும் காய்ச்சல், குளிர்காலத்தில் வரும் சளி, இருமல் போன்றவை. இவை பருவகாலம் முடிந்தபின் சென்றுவிடும்
பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் தன்மை கொண்டவை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறு ஒரு நாட்டுக்குப் பயணிக்கும்போது அங்கிருக்கும் மக்களுக்கும் பரவும். இந்த வகையைச் சேர்ந்ததுதான் கரோனா வைரஸ்.
பாண்டமிக் வைரஸ்
ஆக, கரோனா வைரஸ் என்பது பாண்டமிக் வகையைச் சேர்ந்தது என்றாலும், இது மனிதர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், சுவாகச் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும் ஒரு வைரஸ். ஆனால், இந்த வைரஸ் யாரைத் தாக்குகிறது, அவர்களின் உடல் நிலை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து பாதிப்பின் தன்மை மாறுபடுகிறது.
கடந்த காலங்களில் உலக அளவில் இந்திய அளவில் பல்வேறு வைரஸ்கள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவற்றோடு ஒப்பிடும்போது கோவிட்-19 வைரஸைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை.
இதைக் காட்டிலுமா கரோனா கொடியது?
கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவில் தென் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் பரவத் தொடங்கியது பிளேக். இப்போதுள்ள தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உலுக்கி எடுத்த பிளேக் வைரஸால் 693 பேர் பாதிக்கப்பட்டனர். 56 பேர் பலியானார்கள்.
2006-ம் ஆண்டு தென்னிந்தியாவைப் புரட்டிப்போட்ட சிக்குன் குன்யா காய்ச்சலால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டாலும், அதனால் உயிர் பலி ஏற்பட்டதாக அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் இல்லை.
அடுத்ததாக 2009-ம் ஆண்டு ஏற்பட்ட ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சல் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இந்தியாவிலும் அதன் கோரமுகத்தைக் காட்டியது. இந்த ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சலால் இந்தியாவில் 36,240 பேர் பாதிக்கப்பட்டார்கள். 1,833 பேர் பலியானார்கள்.
2015-ம் ஆண்டு இதேபோல் ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சல் இந்தியாவில் உருவாகி 33,761 பேர் பாதிக்கப்பட்டார்கள், 2,035 பேர் உயிரிழந்தனர்.
2018-ம் ஆண்டு ஏற்பட்ட கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை உலுக்கிய நிபா வைரஸ். கேரளாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர்.
மிகப்பெரிய உயரிழப்புகள்
இந்தியாவில் மிகப்பெரிய உயிரிழப்பைக் கடந்த 1974-ம் ஆண்டு அம்மை நோய் ஏற்படுத்தியது. இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். 61,400 பேர் பாதிக்கப்பட்டார்கள்.
அதன்பின் 2009, 2015-ம்ஆண்டு ஏற்பட்ட ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சல்தான் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த இரு வைரஸ்களால் 3,800 பேர் வரை மாண்டார்கள்.
மற்ற வைரஸ்களால் மக்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர பெரிய அளவுக்கு உயிரிழப்பை நாம் எதிர்கொள்ளவில்லை. அப்போது இருந்த மத்திய அரசும், மாநில அரசுகளும் துரிதமாகச் செயல்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
கட்டுப்படுத்த முடியும்
அந்தக் காலத்தோடு ஒப்பிடும்போது இப்போது தொழில்நுட்ப வசதி, நவீன மருத்துவ வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசு செய்யும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீவிர மருத்துவச் சோதனைகள், விமான நிலையங்களில் கண்காணிப்புகள், தொடர் சிகிச்சைகள் போன்றவற்றால் எளிதாக கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்திவிட முடியும். அதைத் தடுக்கவும் முடியும்.
ஒவ்வொரு மாநில அரசும் கோவிட்-19 வைரஸைத் தடுக்க ஏராளமான தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை அளிக்கத் தனி இடம், விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க தனி இடம், மருத்துவப் பரிசோதனை, மருந்துகள், மருத்துவர்கள் எனத் தயாராக இருந்து வருகிறது. போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கிராமங்கள் முதல் நகரம் வரை மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பரப்பி வருகிறது. ஆதலால், கோவிட்-19 வைரஸ் குறித்த அச்சம் தேவையற்றது.
இறப்புவிகிதம் மிகக்குறைவு
அதுமட்டுமல்லாமல் உலக அளவில் இதற்கு முன் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த மார்பர்க் வைரஸ் (80சதவீதம்), எபோலா வைரஸ் (40),நிபா வைரஸ் (77),சார்ஸ் (10), மெர்ஸ் வைரஸ் (34), பறவைக் காய்ச்சல் (39) பறவைக்காய்ச்சல் ஹெச்5என்1 (52) சதவீதம் எனக் கொடூரமான உயிரிழப்புகளைக் கொடுத்துள்ளன. அப்போதும் மக்களுக்கும் அச்சம் இருந்தாலும், இப்போது இருக்கும் அச்சத்தை ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்க முடியும்.
இந்த வைரஸ்களோடு ஒப்பிடும்போது கோவிட்-19 வைரஸ் மூலம் இறப்பது என்பது 6:2 என்ற விகிதம்தான். அதாவது இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் இறப்பு சதவீதம் என்பது வெறும் 3.5 சதவீதம் மட்டுமே. இதற்கு முன் உலகில் நாசகாரியத்தை செய்த பல வைரஸ்களைக் காட்டிலும் கோவிட்-19 மூலம் வரும் பாதிப்புகள் பெரிதாக இல்லை. அதுகுறித்து தேவையற்ற அச்சமும் வேண்டாம்
யார் கவனமாக இருக்க வேண்டும்?
பெரும்பாலும் கோவிட்-19 வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்தது முதியோர்கள்தான். அதேசமயம், ஏற்கெனவே நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களும் இனிமேல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கோவிட்-19 வைரஸால் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் வயது குறித்து புள்ளிவிவரமே சான்று.
50 வயதுக்கு உட்பட்டவர்கள்வரை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களில் இறப்பு சதவீதம் என்பது ஒரு சதவீதத்துக்கும் உள்ளாகவே இருந்துள்ளது. அதாவது 10 முதல் 19 வயது, 20-29 வயது, 30-முதல் 39 வயது வரை 0.2 சதவீதம் மட்டுமே இறந்துள்ளனர். 40-49 வயது வரை 0.4 சதவீதம் இறந்துள்ளனர்.
60-69 வயதுவரை உள்ளவர்கள் 3.6 சதவீதமும், 70 முதல் 79 வயதுவரை உள்ளவர்கள் 8 சதவீதம், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 சதவீதமும் அதிகமான இறப்பைச் சந்தித்துள்ளனர்.
ஆதலால், இளம் வயதினர், குழந்தைகளுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால்கூட முறையான சிகிச்சை, கவனிப்புடன், ஓய்வு ஆகியவை மூலம் விரைவில் மீள முடியும், மீண்டு வருகிறார்கள். அதிலும் நாம் முறையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றும்போது கோவிட்-19 நோய் தாக்காமல் தப்பிக்க முடியும்.
சுகாதாரம் அவசியம்
கைகளை அடிக்கடி சோப்பு, தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவுதல், ஆல்கஹால் கலந்த சுத்தப்படுத்தும் திரவத்தால் கைகளைக் கழுவுதல் போன்றவற்றால் பாதுகாப்பாக இருக்கலாம்.
ஜலதோஷம், இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மூடுதல், டிஷ்யூ பேப்பர் வைத்து மூடுதல், அதை உடனடியாக குப்பைத் தொட்டியில் போடுதல் எனக் கடைப்பிடித்தால் மற்றவர்களுக்குப் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதைச் சிறிது காலத்துக்குத் தவிர்த்தல், கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவரிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தள்ளியிருத்தல், ஜலதோஷம், தும்முபவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருத்தல் போன்றவை நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும். குறிப்பாக கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முகக் கவசம் அணியலாம்.
இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. அவற்றை முறையாகப் பின்பற்றினால் கோவிட்-19 வைரஸ் பற்றி பயப்படத் தேவையில்லை.
ஆதாரம்: உலக சுகாதார அமைப்பு, உதவி: தமிழ்நாடு வெதர்மேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT