Last Updated : 10 Mar, 2020 10:45 PM

 

Published : 10 Mar 2020 10:45 PM
Last Updated : 10 Mar 2020 10:45 PM

கரோனா வைரஸ்; தெரிந்த சந்தேகங்கள், தெரியாத விளக்கங்கள்: முகக் கவசம் அணிய வேண்டுமா? எத்தனை நாள் தனிமைப்படுத்தலாம்?

பிரதிநிதித்துவப் படம்.

கரோனா வைரஸுக்கு இதுவரை உலகில் எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், கரோனா வராமல் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பு முறைகள் இருக்கின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

சார்ஸ் (SARS) நோய் போன்றதா கோவிட்-19 வைரஸ்?

சார்ஸ் நோய் போன்று கோவிட்-19 நோய் இல்லை. சார்ஸ் நோய் அறிகுறியும், கோவிட்-19 அறிகுறியும் வெவ்வேறானது. சார்ஸ் நோய் அதிகமான உயிரிழப்பை வரவழைக்கும். ஆனால், கோவிட்-19 வைரஸைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் சார்ஸ் தொற்றாது.

கோவிட்-19 வைரஸிலருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிய வேண்டுமா?

கோவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகள் குறிப்பாக இருமல் இருந்தால் மற்றவருக்குப் பரவாமல் இருக்க முகக் கவசம் அணியலாம். கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் அணியலாம். ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசம் இருந்தால் அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களை எத்தனை நாள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கலாம்?

கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் காலம் என்பது அறிகுறியின் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும். குறைந்தபட்சம் ஒருநாள் முதல் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கண்காணிக்கலாம். பெரும்பாலும் 5 நாட்கள் வரை கண்காணித்தாலே ஒருவர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிந்துவிடும்.

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுமா?

கரோனா வைரஸ் என்பது விலங்குகளில் பொதுவாகக் காணப்படும் வைரஸ் குடும்பமாகும். மிகவும் அரிதாகவே விலங்குகள் மூலம் மனிதர்களுக்குத் தொற்று ஏற்பட்டுப் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, சார்ஸ்- சிஓவி போன்றவை பூனைகளுடன் தொடர்புடையது. மெர்ஸ் வைரஸ் ஓட்டங்களோடு தொடர்புடையது. ஆனால், கோவிட்-19 எந்த விலங்குடன் தொடர்புடையது என்பது கண்டறியப்படவில்லை.

விலங்குகள் சந்தைக்குச் செல்லும்போது நம்மைத் தற்காத்துக் கொள்ள விலங்குகளோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். விலங்குகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டுகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, வேக வைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால், விலங்குகளின் உறுப்புகள் ஆகியவற்றைக் கையாளும்போது கவனமாக இருத்தல் வேண்டும். சரியாக வேகவைக்கப்படாத, சமைக்கப்படாத இறைச்சியை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் கோவிட்-19 பரவுமா?

வீ்ட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் கோவிட்-19 பரவாது. குறிப்பாக நாய், பூனைக்கு நோய்த்தொற்று இருந்து அதன் மூலம் கோவிட்-19 பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

தரைதளத்தில், பொருட்களில் எத்தனை நாட்கள் வரை கோவிட்-19 வைரஸ் உயிர் வாழும்?

எத்தனை நாட்கள் வரை கோவிட் -19 வைரஸ் தரைதளத்தில், இடங்களில், பொருட்களில் இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது. முதல்கட்ட ஆய்வுகள் படி கோவிட்-19 வைரஸ் தரைதளங்களில் சில மணி நேரங்கள் முதல் பல நாட்கள் வரை வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இது இடத்தைப் பொறுத்தும், வெப்பநிலை, சூழல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.

கோவிட்-19 தடுக்க இந்தச் செயல்களை நான் செய்யலாமா?

கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ள புகைப்பிடித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட முகக் கவசங்கள் அணிதல், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் பலன் அளிக்காது. உடலை மேலும் பலவீனப்படுத்தும். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதால் சிரமம் இருந்தால், அது தீவிரமடையும் முன் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம். மேற்கண்ட பழக்கங்களைச் செய்தல் கூடாது.

ஆதாரம்: உலக சுகாதார அமைப்பு : (WHO)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x