Published : 10 Mar 2020 09:26 PM
Last Updated : 10 Mar 2020 09:26 PM
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 4 பேருடன் தொடர்புடைய 2,678 பேரை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் மெல்லப் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 50 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மென் பொறியாளர் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 4 பேருடன் தொடர்பு வைத்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மாநில சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்புத்துறையின் சிறப்பு அதிகாரி சுரேஷ் சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:
"பெங்களூருவில் இதுவரை 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் ராஜீவ் காந்தி இதய நோய் பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 4 பேருடன் தொடர்புடைய 2,678 பேரைத் தேடி வருகிறோம். அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குப் பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது. 12 பேரைக் கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் அவர்களுக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
இதுதவிர ஹசன், தக்சின கன்னடா, பாகல்கோட் ஆகிய மருத்துவமனைகளில் 6 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 446 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 389 பேருக்கு கரோனா இல்லை என்று ரத்த மாதிரி அறிக்கையில் தெரியவந்துள்ளது. 760 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,048 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை மங்களூரு விமான நிலையம், பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் 95 ஆயிரத்து 151 பயணிகள் பரிசோதிக்கப்பட்டனர். கார்வார் மற்றும் மங்களூரு துறைமுகத்தில் 5,368 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
மைசூரு, ஹசன், ஷிவமோகா ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன''.
இவ்வாறு சுரேஷ் சாஸ்திரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT