Published : 10 Mar 2020 05:45 PM
Last Updated : 10 Mar 2020 05:45 PM
கேரளாவில் 12 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் மெல்லப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 12 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கரோனா வைரஸால் முதன்முதலில் பாதிக்கப்பட்டதும் கேரள மாநிலம்தான். ஆனால், அந்தப் பாதிப்பிலிருந்து கேரள மாநிலம் மீண்டுவிட்டது. இப்போது 12 பேர் பாதிக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.
கேரளாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் 7-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி, மதரஸா, டுடோரியல் காலேஜ் ஆகியவற்றுக்கு இம்மாதம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை நடத்தத் தடையில்லை என்றாலும் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோயில் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் என்.வாசு, திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''மார்ச் மாதம் இறுதி வரை அனைத்துக் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மதரீதியான எந்த விழாக்களையும் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, மாதப் பிறப்பில் பூஜைக்காக சபரிமலை திறக்கப்படும்போது, பக்தர்கள் யாரும் வர வேண்டாம், அவ்வாறு வருவதாகத் திட்டமிட்டிருந்தாலும் அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாத பூஜைக்குச் சபரிமலை பக்தர்கள் வந்தாலும், அவர்களைத் தடுக்கப்போவதில்லை. இருப்பினும் சூழல் கருதி பக்தர்கள் வருவதைத் தவிர்க்கலாம். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அப்பம், பாயசம் போன்றவை விற்பனை செய்யப்படாது. அந்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும்".
இவ்வாறு வாசு தெரிவித்தார்.
மாதப் பிறப்பையொட்டி வரும் வெள்ளிக்கிழமை சபரிமலை ஐயப்பன் நடை திறக்கப்படும். வரும் 18-ம் தேதி கோயில் நடை மூடப் படும். பின்னர் இம்மாத இறுதியில் 28-ம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரில் 7 பேர் சபரிமலை கோயில் அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT