Published : 09 Mar 2020 06:31 PM
Last Updated : 09 Mar 2020 06:31 PM
கரோனா வைரஸ் அச்சத்தால் உலகப் பொருளாதாரத்தில் மந்தமான சூழல் நிலவி வருவதால், இந்தியப் பங்குச்சந்தையில் இன்று பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை 1,941 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 35,634 புள்ளிகளில் முடிந்தது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவான புள்ளியாகும். தேசியப் பங்குச்சந்தை நிப்டி 538 புள்ளிகள் குறைந்து 10,451 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.6 லட்சத்து 84 ஆயிரத்து 277 கோடி குறைந்தது.
உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய நாடுகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் மத்திய ஆசியா நாடுகள், ஐரோப்பா, இத்தாலி, அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையும் இன்று பெருமளவு சரிந்தது. குறிப்பாக சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை 30 சதவீதம் குறைத்தது. ரஷ்யா, ஒபேக் நாடுகள் உற்பத்தியைக் குறைக்காமல் இருப்பது போன்றவற்றால் கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 32.11 டாலராகச் சரிந்தது.
மேலும், ஷாங்காய், ஹாங்காங், சியோல், டோக்கியோ பங்குச்சந்தையும் 5 சதவீதம் அளவுக்கு இன்று வீழ்ச்சியைச் சந்தித்தன. ஐரோப்பியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணும் 6 சதவீதம் வீழ்ந்தது. இந்த மனநிலை இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால் வீழ்ச்சியுடன் வர்த்தகம் முடிந்தது
வர்த்தகம் முடிவில் ஓன்ஜிசி நிறுவனப் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ ஆகியவை பெரும் இழப்பைச் சந்தித்தன.
2020-21-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபின் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 5,088 புள்ளிகளை இழந்துள்ளது. நிப்டி 1,510 புள்ளிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT