Published : 28 Nov 2022 09:08 PM
Last Updated : 28 Nov 2022 09:08 PM

ஸ்பானிஷ் படத்துக்கு ‘கோல்டன் பீக்காக்’ விருது: கோவா 53-வது சர்வதேச பட விழா ஹைலைட்ஸ்

கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த இயக்குநர்களுக்கு விருது வழங்கப்பட்டன.

ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ சிறந்த திரைப்படமாக அறிவிப்பு: சிறந்த திரைபடத்திற்கான பெருமைக்குரிய கோல்டன் பீக்காக் விருது ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ படத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த திரைப்படம் திரைஉலகின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நிதர்சனப்படுத்தியுள்ளதற்காக சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று போட்டி பிரிவின் நடுவர் குழு தெரிவித்துள்ளது. கோஸ்டரிகா திரைப்பட இயக்குநர் வாலன்டினா மாரல் இயக்கிய இந்த திரைப்படம் 16 வயது இளம்பெண் ஈவா தனது இளமைப்பருவத்தி்ல் காலடி எடுத்து வைக்கும் தருணத்தை விளக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

‘நோ எண்ட்’ பட இயக்குநர் நடேர் சேவர் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருது: ஈரானின் பிற்போக்கான சமூக அரசியல் அமைப்பை மாயாஜாலம் போலவும், அதேநேரத்தில் மென்மையான முறையிலும் எடுத்துக் கூறிய ‘நோ எண்ட்’ திரைப்படத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் நடேர் சேவருக்கு சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் வாகித் மொபாசெரி: ‘நோ எண்ட்’ ஈரான் படத்தின் கதாநாயகன் வாகித் மொபாசெரி-க்கு சிறந்த நடிகருக்கான சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகள் அதிகமின்றி முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் தனது உணர்ச்சிகளை மிக சிறப்பாக வெளிப்படுத்திய வாகித்-க்கு இந்த விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சாதாரண நேர்மையான குடிமகன் போராடும் நிலையில் அவனது இயலாமை மற்றும் கவனத்தை கவரும் அவரது முயற்சி ஆகியவற்றால் இந்த பாத்திரம் உச்சத்தை எட்டுகிறது.

‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ பட நடிகை டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக சில்வர் பீக்காக் விருது: ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்-இல் 16 வயது பெண் ஈவா-வாக நடித்த 19 வயது அறிமுக நடிகையான டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கணிக்க சிரமமான இளமைப் பருவத்தின் நுணுக்கங்களை லாவகமாகவும், புதுமைத்தன்மையுடனும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் தனது பாத்திரப் படைப்பை உணர்ந்து நடித்திருப்பதற்காக டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக விருது வழங்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

தேர்வுக் குழுவின் சிறப்பு விருது: ‘வென் த வேவ்ஸ் ஆர் கான்’ படத்தை இயக்கிய ஃபிலிப்பினோ திரைப்பட இயக்குநர் லாவ் டயாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் காட்சிகள் மூலம் கதை சொல்லும் உத்தியும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள வசனங்களின் அளவும், உணர்வுகளையோ, உச்சக்கட்ட ஆத்திரத்தையோ வெளிப்படுத்துவதில் எந்த குறையும் வைக்கவில்லை என தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

சிறந்த அறிமுக இயக்குநராக பிஹைன்ட் த ஹேஸ்டேக்ஸ் திரைப்படத்தை இயக்கிய அசிமினா ப்ரோட்ரூவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா பந்தி திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலா தேர்வுக் குழுவினரின் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x