Published : 25 Nov 2016 03:35 PM
Last Updated : 25 Nov 2016 03:35 PM
கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
Visaranai | Vetrimaaran | India
'விசாரணை' தமிழ் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படம். தற்போது தமிழ் பார்வையாளர்களைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களும் 'விசாரணை'யைக் காணப் போகிறார்கள்.
2017 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 89-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியா சார்பாக 'விசாரணை' போட்டியிடுகிறது. 16 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்ப்படும் தமிழ்த் திரைப்படம் 'விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கருக்கு அனுப்பப்படும் காரணத்தாலேயே கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'விசாரணை' திரையிடப்பட்ட போது மிக அதிகமான கூட்டம் படத்தினைக் காண கூடியது. முண்டியடித்துக் கொண்டு செல்லாமல் நீண்ட வரிசையில் நின்று இடங்களில் அமர்ந்து கொண்டனர். ஏற்கெனவே 'விசாரணை'யை பார்த்திருந்தாலும் வேற ஊரில், நம்ம படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் விருதுக்கு அனுப்பப்பட்ட 'விசாரணை' திரைப்படமானது நாம் ஏற்கெனவே பார்த்த திரைப்படத்திலிருந்து வேறாக இருக்கும் என்று கேள்விப்பட்ட காரணத்தாலும் 'விசராணை' பார்க்கச் சென்றேன்.
ஆனால் டைட்டிலில் 'விசாரணை' என்ற பெயர் இல்லை மாறாக 'இன்ட்ரோகேஷன்' (Interrogation) என்ற டைட்டில் இருந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிடும் திரைப்படங்களுக்கு தங்களது சொந்த மொழி தலைப்பின் கூடவே ஆங்கிலத்தில் தலைப்பினை வைக்க வேண்டுமாம். எனவேதான் அந்த பெயர்.
முதல் முறை 'விசாரணை'யைப் பார்த்த போது எந்த விதமான பதைபதைப்பும் கோபமும் ஏற்பட்டதோ அதே பதைபதைப்பும் கோபமும் அதிகமாகவே ஏற்பட்டது. விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கும் படத்திற்கும் நாம் பார்த்த படத்திற்கும் எந்தவித மாறுபாடும் இல்லை. நாம் பார்த்த படத்தில் தணிக்கை செய்யப்பட்ட சில வார்த்தைகள் அதில் தணிக்கை செய்யப்படாமல் இருக்கின்றன அவ்வளவே வித்தியாசம். சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களுக்கு இணையாக 'விசாரணை'க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. படத்தைக் காண வந்தவர்களில் நம்ம ஊர் பார்வையாளர்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தனர்.
படத்தின் இறுதியில் சந்திரகுமாரின் பேச்சும் அவரைப் பற்றிய குறிப்புகளும் பல மொழி பார்வையாளர்களுக்கு அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்தைத் தூண்டியது. சிலருக்கு முதலில் போன அந்த இளைஞன்தான் சந்திரகுமார் என்பது புரியவில்லை. அதன்பிறகு தமிழ் ரசிகர்கள் பலர் அவர்களுக்கு விளக்கினர். அப்படியானால் இது உண்மைக் கதையா? என்று பல மொழி பார்வையாளர்களும் வியந்து பார்த்தனர்.
படம் முடிந்தபின் இடைவிடாமல் தட்டப்பட்ட கரவொலிகளே ஆயிரம் ஆஸ்கருக்கு சமானம் என்பதை நிரூபித்தன. உலகத் திரையரங்கில் தமிழ் திரையுலகை நிமிரச் செய்த, செய்கின்ற 'விசாரணை' ஆஸ்கர் விருதுக்கான காத்திருப்புகளுடன் உள்ளது.
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT