Published : 24 Nov 2016 11:58 AM
Last Updated : 24 Nov 2016 11:58 AM

கோவா IFFI 2016 - ஆஃப்டர் இமேஜ்: கலைஞனின் போராட்டம்

கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை

Afterimage | Directed by Andrzej Wajda | Poland

கலை எதற்கும் கட்டுப்பட்டதில்லை. கலை என்பது கலைஞனைப் பொறுத்தே அமைகிறது. அதனைக் கட்டுப்படுத்த நினைப்பது தவறு என்று தனது வாழ்நாள் முழுவதும் ஒரு கலைஞன் போராடுவது எல்லா நாட்டிலும் நிகழும் ஒன்றுதான். கம்யூனிச நாடுகளுக்கும் இது விதிவிலக்கல்ல, என்பதை நம்மிடையே சொல்கிறது ஆஃப்டர் இமேஜ் (Afterimage). போலந்து நாட்டின் முக்கியமான இயக்குநரான ஆந்த்ரே வாய்தேவினால் (Andrzej Wajda) இயக்கப்பட்ட கடைசி திரைப்படம். போலந்து நாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக 89 வது ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம்.

தனது இடது கையினையும் வலது காலினையும், முதலாம் உலகப்போரில் இழந்த வ்லடிஸ்லா ஸ்ட்ரமின்ஸ்கி (Wladyslaw Strzeminski), அதற்கு பின் தன்னுடைய ஒற்றைக் கையில் தூரிகையினை எடுத்து வண்ணங்களோடு வாழ ஆரம்பிக்கிறார். போலந்து நாட்டின் முக்கியக் கலைஞனாக வளரும் அவருக்கு போலந்து நாட்டின் அரசிடம் இருந்து நெருக்கடி வருகிறது.

1950களில் போலந்தின் கம்யூனிச அரசு தனது நாட்டில் இருக்கும் அனைத்தையும் கம்யூனிசத்திற்கு ஆதரவாக மாற்ற நிர்பந்திக்கிறது. இதற்கு ஸ்ட்ரமின்ஸ்கியின் ஓவியமும் பலியாகிறது. சோசலிச யதார்த்தம் (Socialistic Realism) எனும் கருத்தாக்கத்தில்தான் இனி எல்லா கலை வடிவமும் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கிறது போலந்து அரசு. அதனைப் பற்றிய வகுப்புகள் கூட எடுக்கிறது. கலை வடிவத்தை எதற்குள்ளும் கட்டுக்குள் வைக்க முடியாது என இதற்கு உடன்பட மறுக்கும் ஸ்ட்ரமின்ஸ்கியின் நிலை என்னவானது என்பதை கொஞ்சம் கனத்த சம்பவங்களுடன் விவரிக்கிறது ஆந்த்ரே வாய்தேவின் ஆஃப்டர் இமேஜ்.

எல்லா அரசுகளும் தங்கள் நிலையை எதிர்க்கும் எவரையும் விட்டுவைப்பதில்லை. இதற்கு கம்யூனிச அரசும் விதிவிலக்கல்ல என்பதை தைரியமாகவே சொல்லியிருக்கும் படம். ஸ்டாலினின் படம் கொண்ட பேனர் கட்டப்படுவதால் அவரது ஓவியம் வரையும் பணி தடைபடுவதால் அந்த பேனரையே கிழித்தெறிகிறார் ஸ்டெரமின்ஸ்கி. இங்கேதான் தொடங்குகிறது அரசுக்கும் இவருக்குமான முரண். ஸ்டாலினின் பேனரை கிழித்த காரணத்தாலேயே அவர் கம்யூனிசத்திற்கு எதிரானவராக அரசாலும் அதிகாரிகளாலும் பார்க்கப்படுகிறார். ஒவ்வொருமுறையும் அரசிடமிருந்து வரும் கேள்வி உங்களது நிலைப்பாடுதான் என்ன? ஆனால் ஒரு தடவைகூட தனது நிலைப்பாட்டை சொல்லவில்லை. அதே நேரத்தில் கம்யூனிசத்தை எதிர்க்கவும் இல்லை. அதன்பின் அனைத்து கலைகளையும் சோசலிச யதார்த்தவாத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென அரசு நிர்பந்திக்க அதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார் ஸ்ட்ரமின்ஸ்கி.

கம்யூனிசத்தை ஆதரிக்காத ஒரே காரணத்தால் இவர் அடிப்படைவாத்திற்கும் அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கும் ஆதரவானவர் என்று சந்தேகம் கொள்ளும் அரசு, அதனாலயே அவரை வரைய விடாமல் ஒடுக்குகிறது. அவரது ஓவியங்களையெல்லாம் அழிக்கிறது. அவரது கண்டுபிடிப்பான நியோ-ப்லாஸ்டிக் அறை லாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்படுகிறது. அவரது எந்த ஒரு ஓவியமும் அரசுக்கு எதிராக இல்லை என்பது அடுத்த விஷயம். அவரை நேரடியாக சாகடிக்காமல் வாழ்வதற்கான அனைத்தையும் அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறது அரசு. அப்போதும்கூட கலையை நிர்பந்திக்கக் கூடாது என்பதையும் அவர் விடவில்லை. ஸ்ட்ரமின்ஸ்கியின் கதாபாத்திரம்.

அவரது மாணவர்களிடையே வகுப்பெடுக்கும் போது சக மாணவராக மாறிவிடுவதும் ஓவியக் கோட்பாடுகளைப் பற்றி மாணவர்களிடம் பேசுவதும் அடுத்த தலைமுறையினருக்கு அவரது ஓவியங்களை கடத்த நினைப்பதும் ஸ்ட்மிரன்ஸ்கியின் கலையின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. கலையினைப் பற்றி கலாச்சாரத் துறை அமைச்சரிடம் பேசும் இடமே கலையின் மீதான அவரது பார்வையை விளக்குகிறது. ஓவிய முறைகளில் புதிய முறைகளையும் அது சார்ந்த கோட்பாடுகளையும் உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய ஸ்ட்ரமின்ஸ்கி கடைசி வரை அதனை நிறைவு செய்யவே இல்லை.

படம் முழுக்க 1950களில் நடக்கிறது. கம்யூனிச அரசின் கோரமுகத்தைக் காட்டுவதால் இதனை கம்யூனிசத்திற்கு எதிரான படம் என எண்ண வேண்டாம், உண்மையில் இது ஒரு கலைஞனின் வாழ்க்கை. கலை என்பதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என சொல்லி அதற்காக வாழ்ந்த கலைஞனின் வாழ்க்கை. எந்த ஒரு அரசும் தனது குடிமகன்களையும் சரி அந்நாட்டின் கலைஞர்களையும் சரி ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.

வ்லடிஸ்லா ஸ்ட்ரமின்ஸ்கி (Wladyslaw Strzeminski) என்ற கதாபாத்திரம் 1950களில் உண்மையில் வாழ்ந்த ஒரு ஓவியர். அவரது வாழ்க்கையையே திரைப்படமாக தந்துள்ளார் ஆந்த்ரே வாய்தே. அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளிவர இருக்கும் இத்திரைப்படம், இதுவரையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பமாக ஆஃப்டர் இமேஜ் திரையிடப்பட்டது.

- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x