Published : 26 Nov 2016 06:09 PM
Last Updated : 26 Nov 2016 06:09 PM
கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
வாழ்வில் எதிர்பாராத சந்திப்புகள் சில நேரங்களில் எதிர்பாராத உறவைத் தரும். அந்த உறவுகளுக்கு என்ன பெயர் சொல்லி அழைப்பது என்பதுகூட புரியாத ஒன்றாக இருக்கும். என்ன பெயரிட்டாலும் அந்த உறவுகளை விளக்கவே முடியாது. ஆனால், அந்த உறவுகளில் நிச்சயமாய் எதிர்பார்ப்பற்ற அன்பு இருக்கும். அந்த அன்பே அவற்றின் அந்த உறவுகளின் பெயராக மாறிவிடலாம். ஆனால், இந்த உறவு நிலைகள் சில வேளைகளில் பிரச்சனைகளுக்கு வழி வகுப்பவையாக மாறி விடவும் வாய்ப்புகள் உண்டு.
அப்படியான சொல்ல முடியாத அல்லது எப்படிச் சொல்வது என புரியாத ஒரு உறவு நிலையையும், அதனால் ஏற்படும் பிரச்சினையையும் 109 நிமிடங்களில் சொல்கிறது ஜப்பானியத் திரைப்படமான லைக் சம்ஒன் இன் லவ் (Like Someone in Love).
சமீபத்தில் மறைந்த இரானிய திரைமேதையான அப்பாஸ் கியரோஸ்தமியின் (Abbas Kiarostami) கடைசி திரைப்படம்.
பல்கலைக்கழக மாணவியான அகிகோ தனது படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் தனது செலவுக்காக பாலியல் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவளுக்கு நெருங்கிய சிலருக்கு மட்டுமே இது தெரியும். அவளது காதலன் நோரியக்கிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனாலும் அகிகோ மீது சிறிய சந்தேகத்துடனே இருக்கிறான். ஒருநாள் இரவு ஓய்வுபெற்ற பேராசிரியரான டகாஷியின் அழைப்பை ஏற்று அகிகோவை அனுப்பி வைக்கின்றனர். அதன்பிறகு அகிகோக்கும் டகாஷிக்கும் ஏற்படும் உறவு, அதன்பின் டகாஷியின் அகிகோவின் காதலன் நோரியாக்கும் சந்தித்து கொள்ளுதல் என செல்கிறது லைக் சம்ஒன் இன் லவ் (Like Someone in Love).
படம் முழுக்க ஏதோ சிறுகதையைப் படிப்பது போன்ற உணர்வைக் காட்சிக்கு காட்சி உணர முடிகிறது. டகாஷியின் வீட்டுக்குச் செல்லும் அகிகோ டகாஷியுடனான உரையாடலில் தான் ஏன் வந்துள்ளதாக சொல்லவே இல்லை, டகாஷியும் அவளை அழைத்த காரணத்தைச் சொல்லவே இல்லை. ஆனால் அதனைத் தவிர மற்ற பலவற்றைப் பேசிக் கொள்கின்றனர். டகாஷியின் தனிமைக்குக் கிடைத்த ஆறுதலாகவே அன்றைய இரவு இருக்கிறாள் அகிகோ. அதன்பின் அகிகோவின் காதலன் நோரியாக் தாமாகவே வந்து டகாஷி யாரெனத் தெரியாமல் பேசுகிறான்.
டகாஷியைப் பற்றியும் அகிகோவினைப் பற்றியும் தெரிந்துவிடுமோ என்ற சிறிய பதைபதைப்பு எழாமல் இல்லை. அகிகோவால் டகாஷியைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாத சூழலிலும் ஆபத்தைப் போக்க டகாஷியையே தேடுகிறாள். டகாஷியின் பக்கத்து வீட்டுக்கரம்மா அகிகோவை டகாஷியின் பேத்தியாக நினைத்துப் பேசுகிறாள். டகாஷியும் சரி அகிகோவும் சரி யாரிடமும் தங்களுக்குள் இருக்கும் உறவுநிலையின் பெயரைச் சொல்லவில்லை. நோரியாக் ஒரு விதத்தில் உறவுநிலையை எடுத்துக் கொள்கிறான், அதேபோல டகாஷியின் பக்கத்து வீட்டம்மா. வெளியில் இருந்து பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்களது மனநிலையில் இருந்து டகாஷி - அகிகோவின் உறவுநிலையை நினைத்துக் கொள்கின்றனர்.
படம் முழுக்க மொத்தமே மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்தான். அவர்களைத் தாண்டி பார்த்தால் மொத்தப் படத்திலும் பத்து பேருக்கு மேல பார்க்க முடியாது. காருக்குள் நடக்கும் உரையாடல்களும் அதன்பின் நடைபெறும் சம்பவங்களும் கதையை சுவாரசியமாக்க ஆரம்பித்த வேகத்திலேயே சட்டென முடிந்து போவது எதிர்பாராதது. டகாஷி - அகிகோவின் உறவுநிலைக்கான விளக்கம் இல்லாமலேயே படம் முடிகிறது. படத்தின் முடிந்தபின் ஒரு சிறுகதையை படித்து முடித்த உணர்வே ஏற்படுகிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் மீதான விளக்கங்களை பார்வையாளர்களிடமே கொடுத்துவிடுகிறார் அப்பாஸ் கியோரஸ்தமி. அகிகோவையும் டகாஷியையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில்தான் படம் நம்முள் செலுத்தும் தாக்கம் இருக்கிறது.
மனித மனங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பெயரிட இயலாத உறவுகளை வெளிக்கொணர்கிற திரை அனுபவமாக லைக் சம்ஒன் இன் லவ் (Like Someone in Love) நம்மிடையே உரசிச் செல்கிறது.
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த ஈரானிய திரைமேதையான அப்பாஸ் கியோரஸ்தமிக்கு சிறப்பு செய்யும்விதமாக அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT