Published : 29 Jan 2021 12:37 PM
Last Updated : 29 Jan 2021 12:37 PM
நகரச் சந்தடிகளில் சிக்கி, வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் இந்த உலகில் ஏராளம். அவர்கள் என்றைக்காவது ஒருநாள் பரந்து விரிந்த கிராமப் பிரதேசங்களை நோக்கிப் பயணித்து அதனைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை ஹெய்டி (2015) திரைப்படம் மிக மிக அழகாகக் காட்டியிருக்கிறது.
அழகு மட்டுமல்ல அரியவகை மூலிகைகள் அடங்கிய அந்த மலைப் பிரதேசம், மாற்றுத்திறனாளியான கிளாரா என்ற சிறுமியின் கால்களைக் குணமாக்கிவிடுகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு.
உண்மையில் இது கிளாராவின் கதை அல்ல. ஹெய்டி என்ற பெண்ணின் பார்வையிலிருந்துதான் கதை உருவாகிறது. ஒருவகையில் இத்திரைப்படம் ஹெய்டியின் வாழ்க்கையும்கூட.
ஹெய்டி என்பது ஒரு ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள் சூழ்ந்த ஒரு கிராம தெய்வத்தின் பெயர். கிராம தெய்வங்களின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் சுவிட்சர்லாந்திலும் இருக்கிறது போல.
இத்திரைப்படம் ஆல்ப்ஸ் மலை கிராமங்களின் கொஞ்சும் அழகை ஒரு சிறுமியின் கண்களின் வாயிலாக நம்மையும் காண வைத்திருக்கிறது. தாய் தந்தையரை இழந்த நிலையில், அத்தையிடம் வளரும் ஹெய்டி என்கிற சிறுமி ஒரு சுமையாகக் கருதப்படுபவள். ஹெய்டியை ஒருநாள் ஆல்ப்ஸ் மலையில் வாழும் அவள் தாத்தாவிடம் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விடுகிறாள் அவளது அத்தை.
யாரும் கவனித்துக் கொள்ளத் தயாரில்லாத நிலையில்தான் ஹெய்டியின் குழந்தைப் பருவ வாழ்க்கை அமைகிறது. மலைமுகட்டில், மரச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட தனித்த வீடு ஒன்றில் தன்னந்தனியாக வாழும் தாத்தா அல்பிஹியும் அவளை வெறுக்கிறார்.
ஆரம்பத்தில் உருட்டல் மிரட்டல்களைச் செய்யும் கண்டிப்பு மிக்கவராகத் தோன்றுகிறார். அவள் அப்பகுதிக்கு வந்த அன்றுகூட இரவானதும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவடைத்துவிட்டுப் போய் படுத்துக்கொள்கிறார். பிராணிகளோடு சிறுமி ஹெய்டி உறங்கியதை அறிந்ததும் மனதில் பச்சாதாபம் ஏற்பட்டுவிடுகிறது. பரிவோடு அவளை அணுகி உண்ண உணவும் ஆதரவும் தருகிறார். பின்னர் ஹெய்டியின் அற்புதமான பாசத்தை ஏற்றுக்கொள்கிறார் தாத்தா.
தாத்தா அவளைப் பனிச்சறுக்கில் ஸ்லெட்ஜ் வண்டியில் அமரவைத்துச் சவாரி செய்கிறார். பயணிகளுடனும் மலைப் புல்வெளிகளில் ஆடு மேய்க்கும் சற்றே பெரியவனான பீட்டருடனும் அவள் விளையாடுகிறாள். அவள் இதனால் உற்சாகம் அடைகிறாள். ஒரு கட்டத்தில் ஹெய்டியை பள்ளிக்கு அனுப்பத் தாத்தா ஏற்பாடு செய்கிறார். ஆனால், அதுவும் அவளுக்கு நிலைக்கவில்லை.
அவளது அத்தை ஹெய்டியை எப்படியாவது பள்ளிக்குச் செல்வதிலிருந்து தடுக்க நகரத்தில் ஒரு பணக்கார வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிடத் திட்டமிடுகிறாள்.
பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தும் ஒருகாலம் பல நாடுகளில் இருந்துள்ளது என்பதை இக்காட்சியில் காணமுடிகிறது. அதுவும் ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு சிறுமிக்குப் படிப்பெதற்கு என்று நினைக்கும் அலட்சிய மனப்பான்மை.
பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதுதான் இப்படத்தில் மறைந்து கிடக்கும் ஒரு வாழ்க்கைக் கதையின் முக்கிய வேராக இருக்கிறது. அதுவே நான்கு பக்கமும் பூமியில் கால் கொண்டு ஆழச் செல்வதைப் போல உறுதியாக வளர்கிறது. ஹெய்டி பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக வருவதெல்லாம் இப்படத்தில் காட்டப்படுவதில்லை. மாறாக கிளைமாக்ஸில் அவளுக்கு ஒரு மூதாட்டி குறிப்பேடு ஒன்றை அன்பளிப்பாக வழங்குவதை வைத்து நாம் மெல்ல ஹெய்டிதான் அந்த எழுத்தாளர் என்பதையும் மெல்லப் புரிந்துகொள்ளலாம்.
இடைப்பட்ட காட்சிகளில் ஹெய்டி அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஹெய்டியிடம் அவளது அத்தை ஒருநாள் வருகிறாள். அவளது தாத்தாவுக்குத் தெரியாமல் வந்து பாசமாகப் பேசுவது போல நடித்து அவளை அழைத்துச் செல்கிறாள். 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரத்திற்கு ரயிலில் பயணம். ஹெய்டியை அவளது அத்தை ப்ராங்பர்ட் நகரின் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறாள். அங்கே சக்கர நாற்காலியில் சுற்றிவரும் பணக்கார மாற்றுத்திறனாளியான கிளாரா என்ற சிறுமியை பராமரிப்பதுதான் ஹெய்டியின் வேலை.
கிளாரா என்ற பெண் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறாள்; தாயின் மரணத்திற்குப் பிறகு அவள் ஏதோ ஒரு அதிர்ச்சியால் கால்களின் பயன்பாட்டை இழந்துவிட்ட பிறகு சக்கர நாற்காலிதான் துணை. அவரது தந்தை அவளை நேசிக்கிறார் என்றாலும், அவர் பெரும்பாலும் வியாபாரத்தில் இருப்பதால் அவளிடமிருந்து விலகி இருக்கிறார். மேலும் கிளாராவைத் தனது கடுமையான ஆளுகைக்குக் கீழ் வைத்திருக்கிறார் அந்த வீட்டின் எஜமானி.
ஹெய்டி சாப்பாட்டு மேஜையில் பணக்காரர்களின் நாகரிகப் பழக்கவழக்கங்களை அறியாமல் சாப்பிடும் முறையில் அந்த எஜமானியம்மாளிடம் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறாள். அந்த வீட்டின் அனைத்து அசைவுகளும் அந்த எஜமானியின் கடைக்கண் கீழ்தான் எனும்போது அந்த வீட்டில் பொருந்தமுடியாமல் தவிக்கிறாள்.
அவளுக்குத் தனது தாத்தாவின் அன்பும், அரவணைப்பும் எவ்வளவு உன்னதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறாள். தனிமையில் அழுகிறாள். அந்தப் பணக்கார வீட்டை விட்டுச் செல்லத் துடித்தாலும் தன் வயதையொத்த சிறுமியான கிளாராவுக்கு உதவி செய்வது மிக முக்கியமான பணி என்றே நினைக்கிறாள். அவளைப் பிரியவும் மனமில்லை. எனினும் ஒருநாள் ஹெய்டி தப்பிச் செல்வதைக் கண்டு அழைத்துவரும் வீட்டுப் பெரியவர்கள் மறுநாள் அவளை முறையாக வழியனுப்பி வைத்துவிடுகிறார்கள்.
ஹெய்டி தனது மலை கிராமத்திற்கே திரும்புகிறாள் என்பதை உணர்ந்த அவளது தோழி கிளாரா அழுகிறாள்... கதறுகிறாள்.. ஹெய்டி, தாத்தாவின் அரவணைப்பில் மீண்டும் பள்ளி செல்கிறாள். எனினும் தோழி கிளாராவுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள, அந்தக் கள்ளமறியாத இரு பிஞ்சு உள்ளங்களின் நட்பு மீண்டும் அவர்களை இணைக்கிறது. ஹெய்டியைப் பார்க்கத் துடிக்கிறாள் கிளாரா.
இந்த முறை கிளாரா ஆல்ப்ஸ் மலை கிராமத்திற்குச் சக்கர நாற்காலியுடனும் தனது வீட்டுப் பெரியவர்களுடனும் ரயிலில் வந்து சேர்கிறாள்.
ஆல்ப்ஸ் மலைவாசஸ்தலத்துக்கு வந்து சில காலம் தங்கியிருந்தபோது யதேச்சையாக சக்கர நாற்காலியைத் தவறவிடவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போதெல்லாம் ஹெய்டி தன்னுடன் அல்ல அந்தச் சிறுமியுடன்தான் பழகுகிறாள் என்ற கோபத்தில் கிளாராவின் சக்கர நாற்காலியைத் தள்ளிவிட்டுவிடுகிறான் அந்த ஆடுமேய்க்கும் நண்பன்.
இந்த நிலையில் அவள் வேறு வழியின்றி எழுந்து நடக்க முயல்கிறாள். என்ன அதிசயம் உண்மையிலேயே அவளால் ஓடவும் நடக்கவும் முடிகிறது இப்போது. அரிய மூலிகைச் செடிகள் நிறைந்த மலைவாசத்தின் காற்றும் தண்ணீரும் அந்த வாழ்க்கையும் அவளைக் குணமாக்கியுள்ள ஓர் அற்புதம் நடந்தது. இக்காட்சியே ஆடம்பரமிக்க மாசு நிறைந்த நகரச் சந்தடியை விட தூய காற்றுவீசும் எளிய கிராமப் பிரதேசங்களே அருமையானவை என்பதை வலியுறுத்துகிறது.
கிளாராவின் பாட்டியும், ஹெய்டியின் தாத்தாவும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். பிரிகிறபோதுதான் கிளாராவின் பாட்டி, உன் வாழ்க்கையைக் கதையை இதில் எழுது என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை ஹெய்டிக்குப் பரிசாக அளிக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஆதரவற்ற சிறுமி ஹெய்டியாக அனுக் ஸ்டீபனும் தோழியாக இசபெல் ஓட்மேனும், ஆடு மேய்க்கும் நண்பனாக குய்ரின் அக்ரிப்பியும், தாத்தா அல்பிஹியாக புருனோ கன்ஸும், கண்டிப்புமிக்க பணக்கார வீட்டு எஜமானியாக கதரினா ஷாட்லரும் மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒவ்வொருவருடைய இளவயது நாட்களே ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆல்ப்ஸ் மலையில் வாழ்ந்த சின்னஞ்சிறு பெண்ணின் அனுபவங்களே பிற்காலத்தில் ஹெய்டி என்ற பெயரில் 1880-ல் ஒரு நாவலாக எழுதப்பட்டுள்ளது. அந்நாவல் உலகின் லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. நாவலை எழுதிய 'ஜோஹனனா ஸ்பைரி' என்ற பெண்மணி அதன்பிறகு எவ்வளவோ வாழ்ந்திருக்கலாம்; சாதித்திருக்கலாம். ஆனால், தன்னுடைய குழந்தைப் பருவ நாட்களைப்போல உன்னதமானது வேறொன்றும் இல்லை என்று அவர் நினனத்ததுதான் இந்நாவலின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.
அவரது மறக்கமுடியாத காவிய நாட்கள் திரைப்படத்திலும் அதன் சாரம் குறையாமல் வந்திருப்பதற்கு இயக்குநர் அலைன் ஜிஸ்போனர் ஒரு முக்கியக் காரணம். மத்தியாஸ் ஃப்ளீஷர் ஒளிப்பதிவில், பெட்ரா பயோண்டினா வோல்ப்பின் மிகச்சிறந்த திரைக்கதை பிரதியோடு 'ஹெய்டி' நாவலின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் உண்மையாக இருந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT