Last Updated : 08 May, 2015 03:22 PM

 

Published : 08 May 2015 03:22 PM
Last Updated : 08 May 2015 03:22 PM

தி பியானிஸ்ட்: அவலத்தை இசைக்கும் கலைஞன்

இரண்டாம் உலகப்போரின் கோரத் தாக்குதலுக்கு ஐரோப்பா மாபெரும் இழப்புக்குத் தள்ளப்பட்ட காலம் அது. அப்போது நாஸிப் படையினரின் தாக்குதலுக்கு போலந்து தலைநகர் வார்ஸாவும் இரையாகிறது. உன்னதமான ஓர் இசைக்கலைஞனின் வாழ்விலிருந்துதான் இத்திரைப்படத்தின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.

புகழ்மிக்க அந்த இசைக்கலைஞன் விலாடிஸ்லா ஸ்பில்மேனின் பியானோ இசை நிகழ்ச்சி வானொலியில் நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிக்கிறது. ரேடியோ ஸ்டேஷனில் ஒலிப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே அங்கு குண்டு வீசப்படுகிறது. நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் விலாடிஸ்லாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. போலந்து நகருக்குள் ஜெர்மானிய படை இறங்கிவிட்டது என்பதற்கான அந்த எச்சரிக்கை சற்று கூடுதலானதுதான்.

1939களில் ரேடியோவில் நேரலையாக பியானோ இசைநிகழ்ச்சி ஒலிபரப்பாவது என்பது ஓர் இசைக்கலைஞனின் புகழ்மிக்கநிலை. அன்று மாலை வீடு திரும்பியதும், அந்த மகிழ்ச்சியை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறான், வானொலி நிலைய வெடிவிபத்தின் மனத்தாங்கலோடு.

அப்போது ரேடியோவில் ஒரு செய்தி.... பிரான்ஸும் இங்கிலாந்தும் ஜெர்மனிமீது போர்த்தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதைப் பற்றிய அச்செய்தியைக் கேட்டு, உலகப் போர் எனும் மிகப் பெரிய ஆபத்து வளையத்துக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டதை உணர்க்கிறார்கள் அவனது குடும்பத்தினர்.

அதைத் தொடர்ந்து அந்த நகரின் மக்கள் நாஜி வதைமுகாமுக்கு கூட்டம்கூட்டமாக ரெயிலில் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். பலர் வீதிகளிலேயே கொல்லப்படுகிறார்கள். அங்கேயே பிணங்களைக் குவித்து கொளுத்துகிறார்கள். குடும்பத்தினரோடும் சக இசைக்கலைஞர்களோடும் சேராமல் அவர்களைத் தவறவிடுவதோடு இவன் தனித்தும் விடப்படுகிறான்.

இதனால் யூதரல்லாத சில நண்பர்கள் மூலம் சிலகாலம் சில இடங்களில் தப்பி வாழ்கிறான். ராணுவத்தினரின் நெருக்கடிகளிலிருந்து மறைந்து வாழ்கிறான். நல்ல சாப்பாடு கிடையாது. நல்ல தூக்கம் கிடையாது. நல்லது கெட்டது பேசிக்கொள்ள யாருமில்லை. அந்த வாழ்க்கையில் மௌனமும் வலியும், தனிமையும், மனச்சோர்வும், சோகமும் ஏமாற்றமும், அச்சமும் அவனை ஆட்டிப் படைக்கிறது.

வார்ஸாவில் 1939ல் தொடங்கிய போர் 1945ஆம் ஆண்டு முடிவுக்கு வரும்வரை இசைக்கலைஞன் தனிமையில் அங்குதான் வசிக்கிறான். நாஸிப் படையினரால் யூத மக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கட்டிடங்கள் எல்லாம் பீரங்கிகளால் தாக்கப்பட்ட அந்த நகரமே எரிந்து கிடக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் அவன் தப்பி உயிர் பிழைத்தாலும் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். போரில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் எதிர்கொள்ளும் நாட்கள் அடுத்தது என்ன என்ற திகிலோடு கூடிய அச்சத்தோடுதான் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இசைக்கலைஞன் விலாடிஸ்லா ஸ்பில்மென் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்தில் மாடியில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள். அப்போது தங்கள் 3வது மாடிக்கு இணையாக சாலைக்கு அப்பால் எதிரேயுள்ள உள்ளமாடியில் பதறவைக்கும் காட்சியொன்று.

அங்கு நுழையும் ராணுவம் நுழைந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவரை அப்படியே தூக்கிவந்து மேலிருந்து போடுவார்கள். மீதியுள்ளவர்களை கீழே வரவழைத்து ஓடஓட விரட்டி சுட்டுக் கொள்வார்கள்.

வார்ஸா நகரின் யூத மக்களை ஆடுமாடுகளைப்போல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஒரு காட்சி. யாரோ ஒரு பெண்மணி தனக்குக் கிடைத்த கஞ்சி உணவை எடுத்துச்சென்றுகொண்டிருக்க, எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்த ஒரு முதியவர் அதைத் தட்டிவிட்டு, கஞ்சி கீழே கொட்டியவுடன் தரையில் விழுந்து அதை நக்கி உண்ணுவார். மோசமான இந்தநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றால் அங்குள்ளமக்கள் எவ்வளவு நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்கவேண்டும் என்ற கொடுமையை நாம் உணரும் தருணம் அது.

ஒருமுறை இசைக்கலைஞன் கட்டிடவேலை செய்ய நிந்திக்கப்படுவான். அப்போது முதுகில் செங்கற்களை சுமந்து செல்வான். கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் வெளிப்புற படிக்கட்டு வழியாக அவன் செங்கல் சுமந்து செல்லும்போது வானில் போர்விமானங்கள் வரிசையாக பறந்து செல்வதை சற்றே அண்ணாந்து பார்ப்பான். அப்போது அங்கிருந்து குண்டுகள் மழையாகப் பொழியப்பட அதனைக் கண்டு அலறித் தடுமாறுவான்.

இதனால் செங்கற்கள் கீழே விழுந்துவிடும். இதனைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஜெர்மனிய அதிகாரி இவனை கீழே வரச்சொல்லி தனது பூட்ஸ் கால்களால் மிதித்தும், சவுக்கால் கடுமையாக விளாசவும் செய்வான். கடுமையாக துன்புறுத்தப்படுவான். எப்பேர்ப்பட்ட இசைக்கலைஞன் எவ்வளவு நேர்த்திமிகுந்த இசைக்கோர்வைகளை இந்த உலகுக்கு வழங்குபவன் அவனுக்கு இந்த கதியா என நம் மனம் துணுக்குறும்.

நாயகனை ராணுவத்தினருக்கு தெரியாமல் யூதரல்லாத நண்பர்கள் சிலர் தங்கள் இருப்பிடத்தில் தங்கவைப்பார்கள். கீழ்வீட்டில் தங்கியுள்ள யூதரல்லாத சிலர் இவன் யூதன் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். கீழ் வீட்டினரால் காட்டிக்கொடுக்கப்பட இவனது நண்பர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் காட்சியில் நம் நெஞ்சம் கிழிபடும்.

இப்படத்தின் இறுதிக்கு முன்னுள்ள காட்சிகள் மிக மிக முக்கியமானவை. அழகிய இசைக்கலைஞன் தாடியோடு வாடிப்போயிருப்பான். 1944 ஆகஸ்ட் மாதம் அவன் தங்கியிருந்த வீடு தாக்கப்படுகிறது. பீரங்கி குண்டுகளை பாய்ச்சுகிறது. மேலும் வெண் பாஸ்பரஸ் வாயுவைப் பாய்ச்சி தீவைக்கிறார்கள். அப்படியும் இப்படியுமாக ஓடி தீயிலிருந்து தப்பித்து, பல மாடிகள் ஏறி சிதறிய கூரைக்குத் தாவி அங்கிருந்து தொங்குவான்.

சாலையிலிருந்து பார்க்கும் ராணுவத் துருப்புகள் துப்பாக்கியால் சுடுவார்கள். அங்கிருந்து வேறொரு பால்கனிக்கு குதித்து அங்கிருந்து தப்பித்துச் செல்வான். வேறொரு ஆளில்லாத இடிபாடுகள் நிறைந்த வீட்டில் சென்று மறைந்துகொள்வான்.

அங்கிருந்து இன்னொரு வீடு இப்படியாக நகர்ந்து நகர்ந்து ஒரு மருத்துவமனைக் கட்டிடத்தில் சிலகாலம் தங்கியிருப்பான். அங்கும் ராணுவம் குண்டுகளை வீச அவன் பின்பக்கமாக ஓடி ஒரு மதில்மீது ஏறி கீழே குதித்துத் தப்பிப்பான்.

குதித்த இடத்திலிருந்து நிமிர்ந்து எதிரே கவனிப்பான். அவனுக்கு எதிரே மிகப்பெரிய நகரமே இறந்துகிடப்பது தெரியும். அதாவது மாபெரும் கட்டிடங்கள் எல்லாம் தீக்கிரையாகி இருக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித வாசமே இருக்காது. எங்கு நோக்கினும் ஆளரவமற்ற பீரங்கிக்குண்டு தாக்குதலில் இடிந்துநிலையில் தீக்கிரையான கட்டிடங்கள்.

ஒரு காலத்தில் நீண்ட சாலைகளில் டிராம் வண்டி செல்லவும் மரங்களில் வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகுமிகுந்த நகராகவும் இருந்த வார்ஸா, இன்று அலங்கோலமாகி கிடக்கிறது. அவன் நடந்து சென்று ஒரு கட்டிடத்தில் ஏதாவது சாப்பிட அல்லது தாகத்தைத் தணிக்க குடிநீராவது கிடைக்குமா எனத் தேடுவான். அலமாரியிலிருந்த சிறிய தண்ணீர் கேன் ஒன்று கிடைக்க, அதை எடுத்துவந்து சுத்தியால் உடைப்பான். ஓட்டையானதும் அது கைதவறி கீழே விழுந்துவிடும்.

அப்போது நீர் தரையில் கொட்டியவாறே டின் உருண்டோடும். அங்கு அந்த நேரத்தில் வந்து நிற்கும் ராணுவ அதிகாரி இவனை வைத்தகண் வாங்காமல் பார்ப்பார். இவரை உற்றுக் கவனித்தபடி நிற்பார். இவன் அவரை அதிர்ச்சியோடு பார்க்க அவர் இவனிடம் பேசுவார். "நீங்க புகழ்பெற்ற பியானிஸ்ட்தானே. எனக்காக ஒரு பாடலை இசைக்கமுடியுமா?" எனக் கேட்பார்.

தண்ணீர்கூட அருந்தமுடியாத தாகம் தணியாத நிலையில் எக்கச்சக்க மனவலியோடு அவன் அவர் மனம்விரும்பும் இசையை தனது கரங்களால் மீட்டுவான். இதில் மகிழ்ந்த அந்த ராணுவ அதிகாரி அவனுக்குத் தேவையான உணவை வழங்குவார். அவன் பிடிபடாமலும் சுட்டுக்கொல்லாமலும் இருக்க தான் அணிந்திருந்த கோட்டை அவனுக்குத் தந்துவிட்டுச் செல்வார்.

ஓரிரு நாட்களில் சூழ்நிலை மாறிவிட, ஜெர்மனி ராணுவத்தை வெல்கிறது ரஷ்ய ராணுவம்.

இவன் அங்கிருந்து வெளியேறும்போது ரஷ்ய ராணுவம் இவனை சுட யத்தனிக்கும். இவன் கோட்டு என்னுடையதல்ல, நான் ஜெர்மானியனல்லன் என்பான்.

போர்முடிவுக்கு வந்தபிறகு சிலகாலம் கடந்து வார்ஸா மீட்டுருவாக்கத்தில் உயிர்பெறத் தொடங்கும். அதே ரேடியோ நிலையத்தின் அரங்கத்தில் இசைநிகழ்ச்சி அரங்கேறும்.

விலாடிஸ்லா ஸ்பில்மேன் என்ற உண்மையான பியானோ இசைக்கலைஞன் 1954ல் எழுதிய சுயசரிதை நூலிலிருந்தே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல இசைக்கலைஞனிடம் பியானோ வாசிக்கக் கேட்ட ஜெர்மானிய ராணுவ அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்டு பின்னர் ரஷ்ய அரசால் சிறைவைக்கப்பட்டவர்.

நைஃப் இந் தி வாட்டர், சைனா டவுன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியிருந்தும் பிரெஞ்சு இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியை உலகமே இவரைத் திரும்பிப் பார்த்தது தி பியானிஸ்ட் திரைப்படத்தை இவர் இயக்கியபிறகுதான்.

இரண்டாம் உலகப் போரை நினைவுகூர வரலாற்றுநூல்களுக்கு இணையாக திரைப்படங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பதற்கு சாட்சிசொல்லும் ஆவணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x