Last Updated : 21 Jan, 2015 08:20 PM

 

Published : 21 Jan 2015 08:20 PM
Last Updated : 21 Jan 2015 08:20 PM

குழந்தைகளின் தூய்மைகெடாத மனஉலகம்

Film: Where is the Friend's Home?

Director: Abbas Kiarostami

மிகச் சிறிய அளவில்கூட மனிதாபிமானம் அருகிவரும் இக்காலத்தில், குழந்தைகளின் இதயத்தில் அது எவ்வாறு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது என்பதை கூறுகிறது இத்திரைப்படம்

ஈரானின் தொலைதூர கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில்தான் இப்படத்தின் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. அமளிதுமளியாகும் குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம் ஆசிரியரின் வருகைக்குப் பின் அமைதியாகிறது. பரஸ்பர மரியாதையும், நலம்விசாரிப்பும் முடிந்து ஆசிரியர் மாணவர்களிடம் எழுதிவந்திருக்கும் வீட்டுப்பாடத்தை காட்டச் சொல்லி கேட்கிறார். ஒவ்வொரு மாணவர்களும் காட்டுகிறார்கள். நமட்ஸதே எனும் மாணவன் குறிப்பேட்டில் எழுதி வராமல் தனித்தனி தாள்களில் எழுதிவருகிறான். அதை வாங்கிப் பார்க்கும் ஆசிரியர் அதைக் கிழித்துப் போட்டுவிட அவன் விசும்புகிறான்.

அவமானம் தாளாமல் அழுகை

அவனை குறிப்பேட்டில்தான் எழுதி வரவேண்டும் என்று கண்டிக்கிறார். ''ஏற்கெனவே இதை நான் உங்கிட்டே பலமுறை சொல்லியிருக்கேன் இல்லையா?'' என்று கேட்கிறார். விசும்பல் அழுகையாக மாறுகிறது. ''சொல் நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்'' என்று கேட்கிறார். அவன் அழுகை வெடிக்கிறது. ''சொல் நமட்ஸதே...'' தலையைக் குனிந்துகொண்டு ''மூன்று தடவை'' என்றுவிட்டு அவமானம் தாளாமல் அழுகையைத் தொடர்கிறான். நமட்ஸதேவுக்கு அருகிலிருக்கும் மாணவன் அஹ்மத்பூருக்கு மனம் ஏனோ வலிக்கிறது. அவனிடம் குறிப்பேடு இருந்தால் எழுதி வந்துவிடமாட்டானா என்பதுபோல் அமைதியாகப் பார்க்கிறான்.

வீட்டுமுற்றத்தில் அம்மாவுடன் வாக்குவாதம்

வீட்டுக்குத் திரும்பிய அஹ்மத் வீட்டில் உள்ள இன்னொரு குறிப்பேட்டை தனது சக மாணவ நண்பன் நமட்ஸதேவுக்கு கொண்டுபோய் அவன் வீட்டைத்தேடிச் சென்று கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று நினைக்கிறான். அன்று மாலை இவனது வீட்டு வெளிமுற்றத்தில் பெரிய பாத்திரத்தில் துணிகளை ஊரவைத்து துணித் துவைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் தனது நண்பன் நமட்ஸதேயின் குறிப்பேடு இங்கிருப்பதாகவும் அதைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்துவிடுவதாகவும் அனுமதி கேட்கிறான்.

''எனக்குத் தெரியும் நீ விளையாடத்தான் போறே. முதல்ல வீட்டுப் பாடத்தை உட்காந்து முடி. அப்புறம் விளையாடப் போலாம்'' என்று அம்மா கூறுகிறார். இவன் எப்படியெல்லாமோ கூறியும் அம்மா இவனை வெளியே அனுப்ப சம்மதிக்கவில்லை. அவன் எப்படி வீட்டுப் பாடத்தை எழுதுவான் நாளை நடைபெறும் வகுப்பில் அவனுக்கு அடிவிழுமே என்ற நினைவு வருகிறது. சட்டென பதட்டம் அடைகிறான் அஹமத். அடிக்கடி வராந்தாவில் கட்டியிருக்கும் தூளியில் உறங்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த ஊஞ்சலை ஆட்டிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்துகொண்டு அம்மாவிடம் அவர்கள் புரிந்துகொள்ளட்டும் என தன் நண்பனின் நிலையை எடுததுச் சொல்கிறான். ஆனால் அம்மா இவன் தெருக் குழந்தைகளிடம் போய் விளையாடவே இவன் இப்படிக் கேட்கிறான் என்பதில் தெளிவாக இருக்கிறார். வீட்டுப்பாடம் எழுதிவிட்டு நீ விளையாடப் போ என்கிறார். ஆனால் அவனுக்கு மனசு தாளவில்லை. ஐயோ நாளை அவன் அடிவாங்குவானே என்ற வருத்தம் அவனை ஏதேதோ செய்கிறது.பிறகு வீட்டுப் பாடம் எழுதுவதுபோல பாவனை செய்கிறான்.

மலைக்கிராமத்திற்கு நண்பனைத் தேடிச் செல்லுதல்

அம்மா வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டதும் அவன் சடுதியில் பரபரவெனறு நண்பன் ஊர்தேடிச் செல்ல திட்டமிடுகிறான். இவன் அவனுக்குத் தர வேண்டிய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். ஒரு சாதாரண சாயங்காலமாகத்தான் அவன் பயணம் துவங்குகிறது. ஊருக்குவெளியே தெரியும் மலையின் குறுக்கும் நெடுக்குமான பாதைவெளிகளில் அவன் செல்கிறான். மலைமீது சென்று ஒரு கிராமத்தை அடைகிறான். மலையின் எல்லாவித சந்துத் தெருக்களிலும் நுழைந்து நண்பன் வீட்டைத் தேடுகிறான். கடைசியில் அங்கு நண்பனின் வீடு உள்ள கிராமம் அதுவல்ல என்பது புலனாகிறது. ஊர் திரும்புகிறான்.

இன்னொரு மலைக்கிராமத்திற்குச் செல்லுதல்

வழியில் சிலர் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் நமட்ஸதே என்ற பெயரை யாரோ உச்சரிப்பதைக் கேட்ட மாத்திரத்திலேயே குதிரையில் ஏறிச் செல்லும் ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து மலைப்பாதையில், காட்டுவெளியில், வேறொரு புதிய கிராமத்தின் இடுக்கான மலைப்பாதைகளில் என குதிரைக்காரர் செல்லும் பாதைகளில் அடியொற்றி மீண்டும் செல்கிறான். அவரது வீடு ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. அவர் தனது மகனிடம் கதவுகளை எடுத்து வரச்சொல்லி அவற்றை குதிரையின்மீது வைத்து எடுத்துச்செல்லும் இவனைப் பார்க்கிறார்.

உனக்கு என்ன வேணும் என்று கேட்கிறார். நான் நமட்ஸதேவைத் தேடிவந்தேன் என்று கூறுவதைக் கேட்க நேரமின்றி அவர் போய்க்கொண்டே இருக்கிறார். அவர் சென்றபிறகு வீட்டில் உள்ள சிறுவனிடம் ''உனக்கு மொஹமத் ரேஸா நமட்ஸதே தெரியுமா'' என விசாரிக்கிறான். ''என் பெயர் நமட்ஸதேதான். ஆனால் மொஹமத் ரேஸா எனக்குத் தெரியாது. இந்த ஊரில் நிறைய நமட்ஸதே இருக்கிறார்கள். அதில் நீ யாரைத் தேடுகிறாய்...'' என்ற அச்சிறுவனின் கேள்விக்கு ''அவன் என் வகுப்புத்தோழன்.'' என்று கூறுகிறான். அப்போதே மெல்ல பொழுது மங்கத் துவங்குகிறது.

அங்கிருந்து வெளியே வந்து மீண்டும் தனது தேடல் பயணத்தைத் தொடர்கிறான். பொழுது மெல்ல இருட்டத் தொடங்குகிறது. தெரு விளக்குகள் ஏதுமற்ற மலைக்கிராமம் அது. அதனால் நல்ல இருட்டாகிவிட அங்கும் இங்குமாய் வீடுகளின் விளக்கொளியிலிருந்து வரும் ஒளியில் அவன் முகம் நமக்குத் தெரிகிறது. வேறொரு வீடு தேடி இருட்டில் செல்கிறான்.

அங்கு சென்று ''ஐயா.. ஐயா'' என்று அழைக்கிறான். அந்த வீட்டிலிருந்து விளக்கொளி வெளிச்சம் அடிக்கும் வேலைப்பாடுள்ள பாதி ஜன்னலை ஒரு பெரியவர் திறக்கிறார். அவர் வெளியே வந்து இவன் சொல்லும் அடையாளம் உள்ள வீடு ஒன்றை நோக்கி அழைத்துச் செல்கிறார். அவனுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டு தன் வீட்டுக்குச் செல்கிறார். நாய்கள் குரைக்க அவன் அப்படியே நிற்கிறான். அந்த ஜன்னலில் தோன்றும் அவர் ''நான் சொன்ன வழியில் போகலையா?'' என்று கேட்க ''நாய்கள் குரைக்கிறதே'' என்று இவன் கூற அந்தப் பெரியவர் ஜன்னலை மூடிவிடுகிறார்.

வீட்டுப்பாடம் எழுதுதல்

அடுத்த காட்சியில் தனது வீட்டில் சுவரோரம் அமர்ந்திருக்கிறான் இவன். வெளியே புயல்காற்று கடுமையாக வீசுகிறது. நண்பனைக் காணாத ஏக்கம் கவ்விப்பிடிக்கிறது. அம்மா அவனை சாப்பிட அழைக்கிறார். ஆனால் அவன் ''சாப்பாடு வேண்டாம், வீட்டுப்பாடம் எழுதும் வேலை இருக்கிறது'' என்கிறான். நாங்கள் தூங்கவேண்டும் அடுத்த அறையில் போய் உட்கார்ந்து எழுது என்கிறார் அம்மா. அன்று இரவு நண்பனுக்கும் சேர்த்து வீட்டுப் பாடத்தை எழுதுகிறான். அம்மா வந்து சாப்பாடு வைத்துவிட்டுச் செல்கிறார்.

மறுநாள் காலை வகுப்பறையில் ஆசிரியர் வகுப்பறைக்கு வருகிறார். வழக்கம்போல பரஸ்பர மரியாதை, நலம்விசாரிப்பு முடிந்ததும் ஒவ்வொரிடமும் வீட்டுப்பாடத்தை கேட்டு வாங்கிப் பார்த்து 'டிக்' அடிக்கிறார். நமட்ஸதே ஒருபக்கம் திரும்பி குனிந்து அமர்ந்திருக்கிறான். அதில்தான் எவ்வளவு அர்த்தங்கள். பாவம் இந்த உலகில் ஏதேதோ பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்குத்தான் எத்தகைய வலிகள் என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது.

நட்பின் பக்கங்கள்

நல்ல வேளையாக ஆசிரியர் இவனை நெருங்குவதற்குள் அதுவரை வராதிருந்த அஹ்மத்பூர் வகுப்புக்குள் நுழைய அனுமதி கேட்கிறான். ஆசிரியர் ''ஏன் தாமதம்?'' எனக் கேட்டுவிட்டு, அவன் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொண்டவராக பின்னர் அனுமதிக்க வேகமாக நுழைகிறான் அஹ்மத்பூர். தனது அருகான இருக்கை மாணவனான நமட்ஸதேவின் டெஸ்கில் குறிப்பேட்டை வைக்கிறான். ஆசிரியர் வந்து எடுத்துப் பார்த்துவிட்டு நமட்ஸதேவைப் பார்த்து ''வெரிகுட் எக்ஸலன்ட் பாய்'' என்று கூறுகிறார். டிக் அடித்த பக்கத்தில் கேமரா பார்க்கிறது. பக்கங்கள் புரட்டப்படுகிறது. ஒரு பக்கத்தில் ஒரு பூ வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிச் சிறார்களை ஒரு பூவைப் போல அணுகியுள்ள இத்திரைப்படம், மாணவர்களின் பின்புல வாழ்க்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. அந்த சிறுவன் தேடிச் செல்லும் கிராமமோ அந்த வழிகளோ இதுவரை அவன் அறியாததுதான். புதிய உலகம் கண்டுபிடித்த அந்த உணர்வை அவனைப்போலவே நாமும் அடைகிறோம். இதுவரை நாம் அறியாத நிலப்பரப்புகள், வாழ்வியல், மனிதாம்சங்கள் என்று கூடுதலாக அவதானிக்கத் தலைப்படுகிறோம்.

மெசபடோமியா, சுமேரிய கால நாகரிகங்களை நினைவுபடுத்தும், அடுக்கடுக்கான பழங்கால மண் வீடுகளும் கிராமமும் ஃபர்ஹத் சபாவின் ஒளிப்பதிவில் நம் கண்களைப் பறிக்கிறது. இதில் வெகுசிறப்பாக நடித்திருக்கும் சிறுவர்களான பேபெக் அஹ்மத் பூர், அஹ்மத்அஹ்மத் பூர் ஆகிய இருவருமே சரியான தேர்வு.

நாளை வகுப்பில் நண்பன் அடிவாங்குவானே என்று அவனைத் தேடி வீட்டைவிட்டு ஒரு பயணத்தை மேற்கொள்வதும் மாலை மங்கிய வேளையில் அச்சமற்ற பரவசத்தோடு இதுவரை காணாத புதிய கிராமத்தை அவன் கண்டடைவதும் குழந்தைகளுக்கே உண்டான துடிப்பும் உற்சாகமும் மனிதநேயமுள்ள விசயம்தான். ஆனால் அப்பாஸ் கியரஸ்தமி போன்ற உலகத்தரமான இயக்குநர்களின் கைகளில் இந்த மாதிரிக் கதைக்களன்கள் வசப்படும்போதுதான் குழந்தைகளின் நுட்பமான உணர்வு வெளிப்பாடுகளுக்கான கலைசெயல்பாடு மிகவும் வசீகரமானதாகி விடுகிறது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x