Published : 31 May 2023 08:32 AM
Last Updated : 31 May 2023 08:32 AM
தெக்குப்பட்டி என்கிற தென் தமிழ்நாட்டுக் கிராமத்தில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) உயிர் நண்பர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்து தனது மக்களைச் சுயமரியாதையுடன் வாழ அரசியல்படுத்துகிறார் பூமி. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நண்பனின் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கிறார் மூர்க்கசாமி. இவர்களை ஒழித்தால் அன்றி, தனது சாதி அரசியலை நடத்த முடியாது என்று அதே ஊரைச் சேர்ந்த பிழைப்பு அரசியல்வாதி முனியராஜ் (ராஜசிம்மன்) குமுறுகிறார். அதற்காகத் தனது கட்சி தலைவரை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடு செய்கிறார்.அதன் ஒரு பகுதியாக, விழா போஸ்டர்களை ஒட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டுகைகலப்பாகிறது. அப்போது பூமியின்பக்கம் நின்று முனியராஜின் கைகூலித்தொண்டர்களை உதைத்து ஓடவிடுகிறார் மூர்க்கசாமி. ஊருக்குள் விழா நடத்தக்கூடாது என்று பூமி தடை வாங்குகிறார். இதன் பின் முனியராஜின் காய்நகர்த்தல்களால் பூமி, மூர்க்கன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
கிராமம், நகரம் என அரசியல் கதைக்களம் எதுவானாலும் ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என இரு தரப்புகளைக் கொண்டு பல படங்கள் வெளிவந்துவிட்டன. மாற்றாக, சாதியை வைத்து அரசியல்செய்வதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு கிடையாது என்பதைச் சொல்லும்விதமாக, இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரை வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
தாங்கள் விரும்பாத அரசியலை தங்கள் மீது திணிக்க முடியாது என, இரு தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘தொழில்முறை’ கட்சி அரசியலுக்கு எதிராக கரம் உயர்த்துவதை ஆக்ஷன் சினிமாவாக, சுவாரஸ்யமான காட்சிகளின் வழியாகச் சித்தரித்திருப்பதற்காக இயக்குநர் சை. கவுதமராஜைப் பாராட்டலாம். அருள்நிதி - துஷாரா இடையிலான காதலை, திணிப்பாகத் தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பது முதல் பாதிப் படத்தைத் தடங்கலின்றி ரசிக்க உதவுகிறது. சந்தோஷ் பிரதாப்பின் காதலில் எதிர்படும் ‘சொந்த சாதி’க்குள் உறைந்து கிடக்கும் ‘தீண்டாமை அடுக்’கினை விமர்சித்த வகையில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர்.
ஆனால், படத்தின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்த,இருக்கும் மரணத் தண்டனை முறைகளை அறிமுகப்படுத்தி, இடைக்காலதமிழ்நாட்டில் வழக்கிலிருந்த ‘கழுவேற்றம்’ குறித்து அறிமுகம் செய்வது, கதாநாயகன் யாரை அப்படித் தண்டிக்கப்போகிறார் என யூகிக்க வழி வகை செய்துவிடுவது பலவீனம்.
சாதியின் குறியீடாக, மிரட்டும் மீசையை வைத்திருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்பவராகவும் நட்பைக் கொண்டாடுபவராகவும் வரும் அருள்நிதி,ஆக்ஷன், காதல் நடிப்பு இரண்டிலும் மூர்க்கம், மென்மையை கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார். அவர் ஜோடியாக வரும் துஷாராவின் குறும்பும் நக்கலும் கலந்த நடிப்பு, அவரை நீண்ட பயணத்துக்குத் தகுதியான நடிகையாக அடையாளம் காட்டுகிறது. வில்லன்களாக வரும் ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நண்பர்களின் கதைபோல் தோன்றினாலும் இன்றைய தமிழ்நாட்டு கிராமங்களுக்குத் தேவைப்படும் அரசியல் விழிப்புணர்வை சுவாரஸ்யமாகக் கொடுத்ததில் இந்த ‘மூர்க்கன்’ ஈர்க்கவே செய்கிறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT