Published : 25 May 2023 08:31 PM
Last Updated : 25 May 2023 08:31 PM
சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் மே 28-ம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
விஜயின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT