Published : 17 Jul 2014 11:42 AM
Last Updated : 17 Jul 2014 11:42 AM
பொதுவாக ஒரு பாடலை எழுதி, அதற்கு இசையமைத்து, ரிக்கார்டிங் செய்த பிறகுதான் படப்பிடிப்புக்கு போவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பாடல் காட்சியின் படப்பிடிப்பை முடித்த பிறகு அதற்கு ஏற்றாற் போல பாடலை எழுதி இசையமைத்துள்ளார்கள். ராஜசந்ரு இயக்கி நடிக்கும் ‘மது மாது சூது’ படத்தில்தான் இதைச் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கான பாடல் காட்சியை ஷூட் செய்த பிறகு அந்தக் காட்சிகளை ஐபேடில் பார்த்து அதற்கேற்ப பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். இசையமைப்பாளர் சத்யா இசையமைத்த இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தம்பதியினர் பாடியிருக்கிறார்கள்.
இந்தபாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ராஜசந்ரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இது ஒரு வகையான மாண்டேஜ் பாடல்தான். வாழ்வின் எதார்த்த உணர்ச்சிகள் மாண்டேஜ் பாடல்களில் மட்டுமே கிடைக்கும். அளவு கடந்த அன்பை கொட்டி பகிர்ந்துகொள்ளும் ஒரு இளம் தம்பதிகளுக்கான பாடல் இது. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோபுரத்தின் பின்னணியிலும், ஒரு வீட்டிலும் இந்தப் பாடலைப் படமாக்கியுள்ளோம்.
இந்தப் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. எல்லா பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள்தான். வரிகளை எழுதாமல், டியூன் போடாமல், குரல் பதிவு இல்லாமல் ஒரு பாடல் காட்சியை முழுவதுமாக எடுத்துவந்து பின்னர் அதில் ஆடியோ சேர்த்தால் இன்னும் சிறப்பாக வரும் என்ற நினைப்பில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம்.
இதுபற்றி இசையமைப்பாளர் சத்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு அன்பான காதல் தம்பதி இந்தப்பாடலை பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன். பிறகு இருவரும் யோசித்து, ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரிடமும் இந்தப் பாடலை பாடுமாறு கேட்டோம். மறுப்பே சொல்லாமல் ஒப்புக்கொண்டார்கள். ‘சின்ட்ரல்லா சின்ட்ரல்லா என் உலகம் சின்ட்ரல்லா… நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சின்ட்ரல்லா’ என்ற பல்லவியோடு தொடங்கும் இந்தப்பாடலை காதல் சாரம் குறையாமல் அவர்கள் பாடிக்கொடுத்திருக்கிறார்கள். ‘விஷுவல் பார்த்து கிடைக்கும் கிரியேட்டிவ் வார்த்தைக்கு கூடுதல் அழகு’ என்று இசையமைப்பாளர் சத்யா சொன்னார். அந்த உணர்வு இப்பாடலில் இழையோடுகிறது.
இவ்வாறு ராஜசந்ரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT