Published : 11 Oct 2017 05:45 AM
Last Updated : 11 Oct 2017 05:45 AM
கேளிக்கை வரி தொடர்பாக அரசுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவது இல்லை என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திரையரங்கக் கட்டணம், 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரைத்துறையினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:
திரைத் துறை சார்ந்த பல கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். மல்டிபிளக்ஸ் திரையரங்கத்துக்கு விதிக்கப்பட்ட கட்டணம், ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் குறித்தும் பேசினோம். 10 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 2 நாட்களில் பதில் அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். முதல்வரும், அமைச்சர்களும் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம், கேளிக்கை வரி தொடர்பாக அரசுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் வரை புதிய படங்கள் வெளியீடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT