Published : 21 Oct 2017 03:55 PM
Last Updated : 21 Oct 2017 03:55 PM
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகப் பார்க்கிறேன் என்று 'மெர்சல்' சர்ச்சை குறித்து விஷால் தெரிவித்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த சர்ச்சைக் குறித்து நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'மெர்சல்' படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!
'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.
ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் தணிக்கைக் குழு என்பது எதற்கு இருக்கிறது?
தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT