Published : 17 Oct 2017 09:21 AM
Last Updated : 17 Oct 2017 09:21 AM

சினிமா டிக்கெட் புதிய கட்டண விவகாரம்: பறிபோகிறதா மக்களின் பணம்? - சமூக ஆர்வலர்கள் கருத்து

திரைப்படத்தில் நாயகனுக்கும், வில்லனுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சியைவிட, இன்னும் ஆக்ரோஷமாக, அனல் பறக்க நடக்கிறது திரைத்துறையில் அவ்வப்போது நடக்கும் மோதல். இதில் சமீபத்தியது.. புதிய கட்டண கோரிக்கைகள், திரையரங்க விதிமுறைகள் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இடையே சமீபத்தில் எழுந்த வாதங்கள்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திரையரங்குகளுக்கு புதிய கட்டண அறிவிப்பில் மாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. தற்போது அது நடைமுறைக்கும் வரவுள்ளது. இதனால் யாருக்கு லாபம்? இதுசம்பந்தமாக மக்களின் தற்போதைய மனநிலை என்ன? துறை சார்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்..

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்: நடிகர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசு ஆகிய அனைத்து தரப்பும் அடங்கியதுதான் திரையுலகம். இதில் பொதுமக்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்ற அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது தற்போதைய கட்டண உயர்வு. இந்த விஷயத்தில் திரைப்படத் துறையினர் தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டம், வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தங்களுக்கு சாதகமான முடிவைத் தேடிக்கொண்டதாகவே தெரிகிறது.

லஞ்ச பேரமா, பொய்க் கணக்கா?

மகாராஷ்டிராவில் 2015-16ம் ஆண்டில் மட்டும் கேளிக்கை வரியாக மாநில அரசுக்கு ரூ.800 கோடி கிடைத்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2011 தொடங்கி 2016 வரை வெறும் ரூ.386 கோடி மட்டுமே கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. ரஜினி, கமல் போன்ற உச்சம் தொட்ட நடிகர்கள் இருக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் கேளிக்கை வரி வசூலானதா என்ற கேள்வியையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. இதற்கு காரணம், ஒன்று.. அரசுக்கும், திரைப்படத் துறையினருக்கும் இடையே லஞ்ச பேரம் இருந்திருக்க வேண்டும். அல்லது, திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனையில் அரசிடம் பொய்க் கணக்கு காட்டியிருக்க வேண்டும் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

பார்க்கிங் கட்டணம் குறித்து கேட்டால், ‘இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் இருக்கிறது’ என்று பதில் தருகிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இது விளக்கமா, மழுப்பலா, நழுவலா என்பது அவர்களுக்கே வெளிச்சம். திரையரங்குக்குள் ஸ்நாக்ஸ் கொண்டுபோவது தொடர்பாகவும் இதுவரை அவர்கள் தெளிவாக பதில் அளிக்கவில்லை.

திரையரங்குகள் விதிமீறக் கூடாது என்று அறிக்கையும், பேட்டியும் அளித்துவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், சமீபத்தில் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்துக்கு ‘இவ்வளவுதான் சம்பளம் வாங்கினேன்.. அதில் இவ்வளவு வரி கட்டியுள்ளேன்’ என்று வெளிப்படையாக அறிவிக்கலாமே? இதுபோல, அனைத்து நடிகர்களும் தங்கள் உண்மையான சம்பளம், வரி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க நடிகர் சங்கம் சார்பிலேயே இணையதளம் தொடங்கலாமே?

மேலும், திருட்டு விசிடிக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் சினிமாக்காரர்கள், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அதிகம் பேசுவது இல்லை. இந்த ஆதங்கம்தான் மக்களிடமும் வெளிப்படுகிறது. அரசும், திரைத்துறையும் சேர்ந்து, மக்களை மட்டுமே பாதிக்கிற வகையில், புதிய கட்டண முறையை அறிவித்திருப்பது வேதனை.

திரையரங்க கூடுதல் கட்டணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன்: சினிமா கட்டண புதிய விலைப் பட்டியல் அறிவிப்புக்கு வெளியே ஜிஎஸ்டியை வசூலிக்க வேண்டுமா? அல்லது அதிகபட்சமாக ரூ.150 என்று அறிவித்துள்ள தொகைக்குள்ளேயே ஜிஎஸ்டி இருக்க வேண்டுமா? என்பதை இப்போதுவரை அரசு முறையாக தெரிவிக்கவில்லை. தலைமைச் செயலத்தில் முதல்வர் உள்ளிட்டோரை திரைத் துறையினர் சந்தித்துவிட்டு வெளியே வந்து சொன்னது மட்டும்தான் நமக்குத் தெரியும்.

சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேட்டி அளிக்கும்போது, ‘திரையரங்கத்தினர் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டார்கள்’ என்றார். தன் சொந்த திரையரங்கத்தைப் பற்றி மட்டும்தான் அவர் கூறுகிறார்போல. கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், செங்கல்பட்டு பகுதியைச் சார்ந்த பன்னீர்செல்வம் போன்ற திரையரங்க உரிமையாளர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. அதிக கட்டணம் தொடர்பாக நான் ஒரு வழக்கு தொடர்ந்தபோது இதே பன்னீர்செல்வம், ‘திரையரங்குக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் சங்கம் வருமே தவிர, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதில் எல்லாம் நாங்கள் தலையிட முடியாது’ என்றார்.

திரையரங்க உரிமையாளர்கள் இடையே துளியும் ஒற்றுமை கிடையாது. அரசு விதிக்கும் சட்ட திட்டங்கள், நடைமுறைகளை கடைபிடிக்கவும் மாட்டார்கள். அதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்கு ஒரே உதாரணம்.. வெளியாகுமா, இல்லையா? என்று தெரிவதற்கு முன்பே ‘மெர்சல்’ படத்துக்கான டிக்கெட்ரூ.1000-க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது.

விஜய்க்கு நேரம் ஒதுக்கிய முதல்வர்

தற்போது 8 சதவீத கேளிக்கை வரியுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டண முறையில், கேளிக்கை வரி இல்லாத ரூ.10 டிக்கெட்டையே முற்றிலும் எடுத்துவிட்டார்கள். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவே சான்று. திருட்டு விசிடி பற்றி மட்டும் பேசும் திரைத் துறையினருக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியே. மக்களின் கோபம் இவர்களை சும்மா விடாது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களைப் பார்க்க முதல்வருக்கு நேரம் இல்லை. ஆனால், நடிகர் விஜய் நினைத்ததும் பார்க்க நேரம் ஒதுக்கித் தருகிறார்.

திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க அரசு சார்பில் மாவட்டம்தோறும் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கு தனித்தனியே இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய குளறுபடி நடக்க வாய்ப்பு இருப்பதால், தமிழக அளவில் ஒரே தொலைபேசி எண் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

ரசிகர்களாகிய மக்களை நம்பித்தான் திரையுலகம் இருக்கிறது. டிக்கெட் கட்டணத்தை மக்கள் ஒரு சுமையாக உணர்வது, திரையுலகின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x