Published : 22 May 2023 06:35 PM
Last Updated : 22 May 2023 06:35 PM

புகழஞ்சலி | “சரத்பாபு என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரையுலகினர் இரங்கல்

சரத்பாபு

“நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” என்று திரையுலகைச் சேர்ந்தவர்களும், அரசியல் பிரமுகர்களும் சரத்பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரத்குமார், “ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சரத்பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அவரது சகோதரரிடம் உறுதிப்படுத்தினேன். நடிகரும், சிறந்த மனிதருமான சரத் பாபுகாருவின் மறைவு வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

குஷ்பு, “நாம் சிறந்த நடிகரை மட்டுமல்லாமல் சிறந்த அற்புதமான மனிதரையும் இழந்துள்ளோம். எல்லோருக்கும் அவரைப் பற்றிய இனிமையான நினைவுகள் இருக்கும். அவரது புன்னகை, ஆறுதல் வார்த்தைகள், ஆதரவளிக்கும் அவரது வலுவான தோள்களை அனைவரும் மிஸ் செய்வார்கள். நான் அவரை எப்போதும் ‘என் பெரிய அண்ணன்’ என்றுதான் அழைப்பேன். இறுதியாக நீங்கள் வலியில்லாமல் நிம்மதியாக உறங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “"பிரபல தென்னிந்திய நடிகர் சரத்பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், “எப்போதும் சிரிக்கும் இந்த ஆன்மாவை சந்தித்ததில் ஆச்சரிமடைகிறேன். அவரது அரவணைப்பையும் ஊக்கத்தையும் என் வாழ்க்கை முழுவதும் போற்றுவேன்.. அனைத்திற்கும் நன்றி அன்புள்ள சரத்பாபு” என தெரிவித்துள்ளார்.

சரத்பாபு திரைப் பயணம்: 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சரத்பாபு. ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது. தவிர, ‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x