Published : 20 Oct 2017 05:04 PM
Last Updated : 20 Oct 2017 05:04 PM
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' படத்துக்கு பாஜக-விலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியிலிருந்து ஓர் ஆதரவுக் குரல் வந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சித் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக இளைஞரணி செயற்பிரிவு உறுப்பினர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இது ஒரு திரைப்படம் மட்டுமே. அதில் நடிகர்கள் சில பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும், நடிகர்கள் வசனங்களை எழுதுவதில்லை. அப்படியிருக்க அவர்களை ஏன் பழிக்க வேண்டும். தணிக்கைக்குப் பின்னரே வெளியாகியுள்ளது.
விமர்சனங்கள் சினிமாவுக்கும் அரசியலுக்கும் புதிதல்ல. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டுமே உணர்வோம். அதை வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தக்கூடாது. திரைப்படத்தில் ஒரு நடிகர் ஏற்கும் கதாபாத்திரங்கள் உண்மையல்லவே. விஜய் நிஜ வாழ்வில் மேஜிக் நிபுணரும் இல்லை; மருத்துவரும் இல்லை.
நாம்தான் அரசியலையும் பொழுதுபோக்கையும் குழப்பிக் கொண்டிருக்கிறோம். எனவே, சினிமாவையும் சினிமா வசனங்களையும் பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT