Published : 19 May 2023 08:07 PM
Last Updated : 19 May 2023 08:07 PM

அருவாவைத் தாண்டி ஒற்றுமை பேசும் வசனம் - ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ட்ரெய்லர் எப்படி?

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

‘விருமன்’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - சோகத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், கருப்பு சட்டை, தொடை தெரியும் வேட்டியுடன் ஆர்யா என்ட்ரி கொடுத்ததும் அதிர்கிறது. அவரது என்ட்ரியே 4 பேரை தூக்கி போட்டு அடிப்பதுடன் தான் தொடங்கிறது. ‘தனித்தனியா நின்னா தண்ணி தான் காட்டுவாங்க; கூடி நின்னாதான் அடுத்தவன் கொழையறுக்க முடியும்’ போன்ற வசனம் ஒற்றுமையின் பலத்தை பாஸிட்டிவாக பேசுகிறதா? நெகட்டிவாக எடுத்துகொள்வதா என வித்தியாசமான டோனில் உள்ளது.

ட்ரெய்லரில் தேடிக்கொண்டிருந்த ‘கவுரவம்’ வார்த்தை ஓரிடத்தில் பிடிப்பட்டதும்தான் இது அக்மார்க் முத்தையா படம் என்பதை உணர முடிகிறது. முஸ்லிம் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார். ‘பேர் மாறுனாலும் ஊர் மாறாது, உறவு மாறாது’, ‘அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு இப்போ தேவையில்ல; அல்லாவும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு” போன்ற இஸ்லாமியர்களுக்கு ஆதரவான வசனங்கள் கவனம் பெறுகின்றன. படம் வரும் ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x